துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவர் கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
சந்தேகநபர்களுக்கு பல கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்பு உள்ளதாகவும் அவர்கள் இதுவரை 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை கொள்ளையிட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி தொம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகை தந்த அடையாளம் தெரியாத இருவர் தங்க நகை அடகு வைக்கும் நிலையமொன்றில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களை துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தி 65 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைகளை கொள்ளையிட்டு சென்றிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றவியல் விசாரணைப்பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
இதற்கமைய மிக நீண்ட விசாரணையின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்று ஐந்தரை வருடங்களின் பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கொள்ளைசம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசியும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
39 வயதுடைய பெலியத்த பிரதேசத்தைச்சேர்ந்த ஒருவரே சம்பவத்தின் போது கைது செய்யபபட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளுக்கு அமைய கொள்ளையிடும் பொருட்களை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் அதனை விற்பனை செய்வதற்கு உதவியக் குற்றச்சாட்டில் மற்றுமொறு கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதுடைய வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தாம் பல்வேறு கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புப்பட்டுள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
2020 ஆண்டு பிலியந்தலை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடியமை அதே வருடம் ஹோமாகம பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு நுழைந்து துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி 50 ஆயிரம் ரூபாவை கொள்ளையிட்டமை 2021 ஆம் ஆண்டு தலங்கம பகுதியில் உள்ள தனியார் வர்த்தக நிலையமொன்றுக்குள் நுழைந்து 51 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டமை அதே வருடம் கம்பஹா பிரதேசத்தில் நிதி நிறுவனமொன்றுக்குள் நுழைந்து 3 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை கொள்ளையிட்டமை உள்ளிட்ட பல சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் தாம் இதுவரை 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை கொள்ளையிட்டுள்ளதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். சந்தேகநபர் பெலியத்த பிரதேசத்தில் அதி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளதாகவும் அயல் வீட்டில் உள்ளவர்களுக்கு தன்னை ஒரு வர்த்தகர் ஒருவர் என அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

