குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் போலியான தகவல்களை முன்வைத்து சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் சனிக்கிழமை (24) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாளர் நாயகத்திடம் போலியான தகவல்களை முன்வைத்து 3 கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முயற்சித்த இருவர் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தின் ஆட்கடத்தல் மற்றும் சமுத்திரவியல் குற்றவிசாரணைப்பிரிவுக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இருவரும் அந்தத்திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
32 மற்றும் 51 வயதுகளுடைய மாளிகாவத்தை மற்றும் எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் பத்தரமுல்லை மற்றும் கொஹூவல பிரதேசங்களில் புகைப்படபிடிப்பு நிலையமொன்றை நடத்தி வந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது வெளிநாட்டில் தலைமறைவாகியிருக்கும் திட்டமிட்டக்குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் கெஹெல்பத்தர பத்மகே என அழைக்கப்படும் கோராலகமகே மந்தினு பத்மசிறிவின் புகைப்படத்தை மாற்றங்களுக்குட்படுத்தி கடவுச்சீட்டை தயாரிப்பதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கெஹெல்பத்தர பத்மகே கடந்த 2014 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும் குறித்த கடவுச்சீட்டு கடந்த வருடம் காலவதியாகி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் கெஹெல் பத்தர தனது கடவுச்சீட்டை புதுப்பிக்கும் நோக்கில் அவரது புகைப்படத்துடன் வேறு இரு பெயர்களை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்துகொண்டு கடந்த வருடம் ஒரு நாள் சேவையின் கீழ் புதிய கடவுச்சீட்டு ஒன்றை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது மாத்திரமல்லாமல் இந்த வருடமும் இரண்டு வௌவ்வேறு பெயர்களில் மேலும் இரண்டு கடவுச்சீட்டுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் கெஹெல் பத்தரவின் நிழற்படங்கள் காணப்பட்டுள்ளமை வெளிக்கொணரப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலானய்வுத்திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

