தமிழகத்துக்கு வர இருந்த ஹெச்சிஎல், ஃபாக்ஸ்கான் செமிகண்டக்டர் தொழிற்சாலை உத்தர பிரதேசத்துக்கு சென்றதன்மூலம் ரூ.3,706 கோடி முதலீட்டை தமிழக அரசு நழுவவிட்டுள்ளது என்று தமிழக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹெச்சிஎல், ஃபாக்ஸ்கான் ஆகிய நிறுவனங்களின் செமிகண்டக்டர் தொழிற்சாலை தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளதாக கடந்த 2 ஆண்டுகளாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆலைகள் தற்போது உத்தர பிரதேசத்தில் தொடங்கப்பட இருப்பது வியப்பளிக்கிறது.
உத்தர பிரதேச மாநிலம் கவுதம புத்தா மாவட்டத்தில் உள்ள ஜேவாரில் ஹெச்சிஎல், ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் ரூ.3,706 கோடி முதலீட்டில் தொடங்கும் செமிகண்டக்டர் தொழிற்சாலைக்கு மத்திய அரசு கடந்த 14-ம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம், தமிழக அரசு மிகப்பெரிய வாய்ப்பை நழுவவிட்டது வருந்தத்தக்கது.
உற்பத்தியில் சிறந்த மாநிலம் என்று பெயர் பெற்ற தமிழகம் இந்த விவகாரத்தில் தவறு இழைத்ததா. அல்லது முதலீட்டாளர்களுக்கு தமிழகத்தைவிட உத்தர பிரதேச அரசு அதிக சலுகைகளை வழங்கியதா. பெரிய மாநிலம், அதிக மனித ஆற்றல், தொழில் தொடங்க பல்வேறு சலுகைகள் ஆகியவைதான் இதற்கு முக்கிய காரணம்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கட்டமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தமிழக அரசு இனியும் நத்தை வேகத்தில் நகர்வது நல்லது அல்ல. மேலும், கட்டமைப்புகளில் அதிக முதலீடுகளை செய்ய திமுக அரசு தவறி வருகிறது. பல்வேறு துறைகளில் பல மாநிலங்கள் போட்டி போட்டு, தமிழகத்தை பின்னுக்கு தள்ளி வருகின்றன. இதை தமிழக அரசும், முதல்வரும் உணர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

