161 உள்ளுராட்சிமன்றங்கள் தொடர்பில் விரைவில் வர்த்தமானி !

68 0

உள்ளுராட்சிமன்றங்களில் பதவிகளுக்கான நியமனங்கள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது. எனினும் எந்தவொரு தனி கட்சியும் 50 சதவீதத்துக்கும் அதிக வாக்குகளைப் பெற்றுக் கொள்ளாத 178 உள்ளுராட்சிமன்றங்களுக்கான உறுப்பினர்களது பெயர்களை விரைவில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி அடுத்த பதவி காலம் ஆரம்பமாகவுள்ளது. அதற்கமைய 161 உள்ளுராட்சிமன்றங்களில் மேயர்கள், பிரதி மேயர்கள், தலைவர்கள், பிரதி தலைவர்களை நியமிப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை. எனவே அவை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்படும்.

எவ்வாறிருப்பினும் எந்தவொரு தனி கட்சியும் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளாத 178 உள்ளுராட்சிமன்றங்களுக்கான உறுப்பினர்களை விரைவில் பெயர் குறிப்பிட்டு, தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கு அறிவிக்குமாறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்டை குழுக்களின் தலைவர்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த உள்ளுராட்சிமன்றங்களுக்கான  மேயர்கள், பிரதி மேயர்கள், தலைவர்கள், பிரதி தலைவர்கள் உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் தலைமையில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெறும் கலந்துரையாடலின் போதே தெரிவு செய்யப்படுவர். இதற்கு குறித்த உள்ளுராட்சிமன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள் தேவையாகும்.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் இந்த தகவல்களை வழங்கினால் மாத்திரமே எம்மால் இது குறித்து வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியும் என ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.