முள்ளிவாய்க்கால் மண்ணில் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் எனஎந்தவித வேறுபாடுமின்றி , தமிழன் என்ற காரணத்தினால் இரத்த வெறி பிடித்த சிறிலங்கா அரச பயங்கரவாதம், எம் உறவுகளைக் கொத்துக் கொத்தாய்க் கொன்று குவித்து பதினாறு ஆண்டுகளாகிவிட்டன.மே 18 என்றாலே முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழின அழிப்புதான்நினைவுக்கு வரும். ஆம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சிறிலங்கா அரசால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி டென்மார்க்தலைநகரில் மாபெரும் எழுச்சிப்பேரணி 18.05.2025 அன்று நடைபெற்றது.
இப்பேரணியில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் எழுச்சியுடன் கலந்துகொண்டனர். இப்பேரணி டென்மார்க் தலைநகரின் Sankt Annæ pladsஇல் இருந்து பதாகைகள், தமிழீழத் தேசியக்கொடிகளுடன் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி, உரத்த குரலிலான ஆர்ப்பரிப்புடன் நகர வீதிகள் ஊடாக , கோபன்ஹேகன் நகரசபை சதுக்கத்தை வந்தடைந்தது அங்கே சிறப்பாக வடிவமைக்கப் பட்டிருந்த நினைவுத் தூபிக்கு முதன்மைச்சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தி அகவணக்கம் செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து டென்மார்க் பாராளுமன்ற மற்றும், நகரசபை உறுப்பினர்கள், டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றிய (DSTF ) மற்றும் தமிழ் இளையோர்அமைப்பினது உறுப்பினர்கள், மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவிகள், அனைத்துலகத் தொடர்பகத்தினர் உறுப்பினர் ஆகியோர்களின் எழுச்சி உரைகள் இடம் பெற்றன. இறுதியாக நம்புங்கள் தமிழீழம் என்ற பாடல் இசைக்கவிடப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகை மந்திரத்தை அனைவரும் உரக்கக்கூறி பேரணி நிறைவுக்கு வந்தது. நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் எம் மக்கள் பட்ட வேதனைகளை எமது அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்குடன் “முள்ளிவாய்க்கால் கஞ்சி” அனைவருக்கும் பரிமாறப்பட்டது குறிப்பிடதக்க நிகழ்வாக இடம் பெற்றது.