கைதுசெய்யப்படும் சந்தேக நபர்களின் உயிரைப் பாதுகாப்பது பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்பு

102 0

பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்படும் சந்தேக நபர்களின் உயிரைப் பாதுகாப்பது பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்பாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் எல்.டீ.பி. தெஹிதெனிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இச்சந்திப்பு வேளையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில நாட்களாக பொலிஸ் நிலையங்களின் சிறைக்கூண்டுகளில் தடுத்து வைக்கப்படும் சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்படும் சந்தேக நபர்களும் உயிரிழக்கும் சம்பவங்கள் பல இடம்பெற்று வருகின்றன. இது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உயிர் வாழும் உரிமை உண்டு.

கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் குற்றவாளியா, இல்லையா என்பதை உறுதி செய்வதும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளை வழங்குவதும் சட்டத்தின் பொறுப்பாகும். அதேபோல கைது செய்யப்படும் சந்தேக நபர்களின் உயிரைப் பாதுகாப்பது பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்பாகும்.

பொலிஸாரால் கைது செய்யப்படும் சந்தேக நபர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டதா, கைதிகள் பயன்படுத்தும் வகையில் சுத்தமான கழிவறைகள் உள்ளனவா, சந்தேக நபர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளனவா என்பனவற்றை ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடாகும்.

எனவே, ஒரு சந்தேக நபரை கைது செய்யும்போது பொலிஸ் அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டிக் கையேடு ஒன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டிக் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஒரு சந்தேக நபர் எவ்வாறு கைது செய்யப்பட வேண்டும், சந்தேக நபரை கைதுசெய்யும்போது பொலிஸார் என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், சந்தேக நபர் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும், சந்தேக நபர்  சிறைச்சாலையில் எவ்வாறு நடத்தப்பட வேண்டும், சந்தேக நபர் “குற்றவாளி” என சட்டத்தினால் தீர்மானிக்கப்பட்ட பின்னர் அவர் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் முதலான பல்வேறு விடயங்கள் இந்த வழிகாட்டி கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் இந்த கையேட்டில் குறிப்பிடப்படும் விடயங்களை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்.

அடிப்படை மனித உரிமைகள் என்ற அடிப்படையில், கைதுசெய்யப்படும் சந்தேக நபர்களுக்கு நல்ல உணவு, சுத்தமான தண்ணீர், சுத்தமான கழிவறை வசதிகளை பெற்றுக்கொடுப்பது மிக முக்கியமான கடமையாகும்.

அத்துடன், ஊடகங்களும் கைதுசெய்யப்படும் சந்தேக நபர்களின் தனிப்பட்ட விபரங்களை (பெயர், பழைய குற்றங்கள், தொழில் மற்றும் குடும்பத்தினரின் விபரங்கள்) செய்திகளாக வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அவ்வாறான விபரங்கள் அடங்கிய செய்திகள் வெளியாகும் பட்சத்தில் சந்தேக நபர் மன உளைச்சலுக்கு ஆளாகலாம். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட சந்தேக நபர் தவறான வழிக்குச் செல்லக்கூடும்.

கைதான சந்தேக நபர் பற்றிய விபரங்கள் ஊடகங்களில் செய்திகளாக வெளியான பின்னர், அந்த சந்தேக நபர் “குற்றமற்றவர்” என சட்டத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டால், முன்னதாக வெளியான அவர் பற்றிய செய்திகள் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதித்துவிடக்கூடும் என்பதும் கவனிக்கவேண்டிய விடயமாகிறது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவ தெரிவிக்கையில்,

பொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பது பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்பாகும். பொலிஸ் பாதுகாப்பில் உள்ள சந்தேக நபர்கள் உயிரிழப்பதால் பொலிஸ் அதிகாரிகளை கண்டு பொதுமக்கள் அச்சமடைகின்றனர். இது பொதுமக்கள் எதிர்நோக்கும் மிகப் பெரிய பிரச்சினை.

இவ்வாறான செயற்பாடுகளினால் பொதுமக்களுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் உள்ள நம்பிக்கையும் நட்புறவும் பாதிக்கப்படுகின்றது.

ஒரு சந்தேக நபரை கைது செய்யும்போது அவரது உடல் நிலை குறித்து பொலிஸார் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கைதுசெய்யப்படும் சந்தேக நபர் தான் சுகயீனமுற்று இருப்பதாகக் கூறினால், அதனை அலட்சியப்படுத்தாமல்  உடனடியாக அந்த நபரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

சந்தேக நபர் கைதுசெய்யப்படும்போது அவரது உடலில் காயங்கள் காணப்பட்டால், அவருக்கு சிகிச்சை அளிக்கவேண்டியது பொலிஸாரின் கடமையாகும்.

கைதுசெய்யப்படும் சந்தேக நபர்களுக்கு உரிய வேளைகளில் தண்ணீர், உணவு கொடுக்க வேண்டும். அவர்கள் கழிவறைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

சில பொலிஸ் அதிகாரிகள் கைதான சந்தேக நபர்களுக்கு தண்ணீர், உணவு கொடுக்காமல், அவர்களை நாட்கணக்கில் தடுப்புக் காவலில் வைத்து பலமாகத் தாக்கி, காயப்படுத்துகின்றனர். இது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

பொலிஸ் அதிகாரிகள் தங்களது பதவியையும் அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்த முடியாது. இவ்வாறு சட்டத்துக்கு முரணாக, தகாத முறையில் செயற்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பொலிஸ் அதிகாரிகள் கைதான சந்தேக நபர்களை வேறோர் இடத்துக்கு மாற்றும்போது அவர்களை எங்கு அழைத்துச் செல்கின்றார்கள், எத்தனை பொலிஸ் அதிகாரிகள் உடன் செல்கின்றார்கள், என்னென்ன ஆயுதங்களைக் கொண்டு செல்கின்றார்கள் என்பது தொடர்பாக அறிந்திருப்பது அந்தந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் கடமையாகும்.

பொலிஸ் நிலையங்களின் சிறைக்கூண்டுகளில் மாத்திரம் அல்ல சிறைச்சாலைகளிலும் கைதிகள் உயிரிழக்கின்றனர். இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.

பொலிஸ் நிலையங்களின் சிறைக்கூண்டுகளில் இடம்பெறும் மரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட, அந்தந்த பொலிஸ் நிலையங்களிலேயே விசாரணை செய்யப்படுகின்றது. இது எவ்வாறு நியாயமாகும்?

எனவே, பொலிஸாரால் கைதுசெய்யப்படும் சந்தேக நபர்கள் உயிரிழந்தால், அது தொடர்பாக விசாரணை செய்வதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவ மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கெயான் தினுக் குணதிலக்க தெரிவிக்கையில்,

உலகில் உள்ள பல நாடுகளில் கைதுசெய்யப்படும் சந்தேக நபர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த கடமையுணர்வு இலங்கையிலும் கடைபிடிக்கப்பட வேண்டும்.

கைதிகளின் பாதுகாப்பின்மை தனிப்பட்ட மனிதர்களின் உரிமைகளைப் பாதிக்கும் விடயமாகும்.

எனவே, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டியை பொலிஸ் அதிகாரிகள் உரியவாறு கடைப்பிடிக்க வேண்டும்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அவற்றில் மனித உரிமைமீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து மாத்திரமே எமது ஆணைக்குழுவால் நடவடிக்கை எடுக்க முடியும்.

பொதுமக்களின் நலன் கருதி நாட்டில் பல ஆணைக்குழுக்கள் செயற்படுகின்றன. எனவே, தங்களது முறைப்பாட்டுடன் தொடர்புடைய ஆணைக்குழு எதுவோ, அந்த ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகளை அளிப்பது தொடர்பாக பொதுமக்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும் என தினுக் குணதிலக்க தெரிவித்தார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் தையமுத்து தனராஜ் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

நாங்கள் சுதந்திரம் அடைந்த நாட்டில் உள்ளோம். ஒரு ஜனநாயக நாட்டில் சட்டத்தின் ஆட்சி என்பது மிகவும் முக்கியமாகும்.

சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவது வழக்கம்.

கைதுசெய்யப்படும் சந்தேக நபர் சட்டத்தினால் “குற்றவாளி” என தீர்ப்பளிக்கப்படும் வரை அவர் “குற்றவாளி அல்ல”.

ஆனால் கைதுசெய்யப்படும் சந்தேக நபர்களில் பலர், சட்டத்தினால் “குற்றவாளி” என நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு பெறப்படுவதற்கு முன்னரே பொலிஸ் பாதுகாப்பில் இருக்கும்போது உயிரிழந்துள்ளனர். இது  ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல.

சட்டத்தின் ஆட்சி உள்ள ஒரு ஜனநாயக நாட்டில் சட்டத்தினால் கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் உயிரிழப்பது மிகவும் பாரதூரமான விடயமாகும்.

இதைத் தடுப்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வழிகாட்டி கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த வழிகாட்டி பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு கடந்த 17ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த வழிகாட்டி கைதுசெய்யப்படும் சந்தேக நபர்களின்  உயிரைப் பாதுகாக்க உதவுமென  நம்பப்படுகிறது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள பல புனர்வாழ்வு நிலையங்கள், சிறைச்சாலைகள் மற்றும் பொலிஸ் நிலையங்களின் சிறைக்கூண்டுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றார்கள், அவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள், பொருட்கள், உணவுகள் ஆகியவை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆராய்ந்து வருகிறது என மேலும் தெரிவித்தார்.