எமக்கு அட்டூழியம் செய்த நாடுகள் சின்னாபின்னமாக சிதறிபோகும் நிலைவரும்

140 0
பல நாடுகள் இணைந்து எம் இனத்தை அழித்ததாக கூறுகின்றார்கள். அந்த பல நாடுகளும் பதில் கூறியேதான் ஆகவேண்டும். நிச்சயமாக தமிழ் இனத்திற்கு என்றொருநாள் விடிவு கிடைக்கும். அப்போது எமக்கு அட்டூழியம் செய்த நாடுகள் சின்னாபின்னமாக சிதறிபோகும் நிலைவரும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் மே -18, தமிழினத்தை அழித்த நாளாக இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. குண்டுகள் பொழிந்து பலரையும் அழித்தொழிக்கும் நோக்கத்தோடு இலங்கை அரசாங்கத்தினுடைய இனவாதிகள் சேர்ந்து கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு வன்முறையை எங்களுடைய தமிழினத்தின் மேல் பாய்ச்சப்பட்ட நாளாக மே 18 இன்றைய தினம் நினைவு கூரப்படுகின்றது.

இந்நாளுக்கு யாராவது பதில்  கூறியே ஆகவேண்டும். பல நாடுகள் இணைந்து எம் இனத்தை அழித்ததாக சொல்கின்றார்கள். அந்த பல நாடுகளும் பதில் சொல்லியேதான் ஆகவேண்டும். நிச்சயமாக தமிழ் இனத்திற்கு என்றொருநாள் விடிவு கிடைக்கும். அப்போது எமக்கு அட்டூழியம்  செய்த நாடுகள் சின்னாபின்னமாக சிதறிபோகும் நிலைவரும் .

எம் மக்களுடைய ஆத்மா சாந்தியடைய மக்கள் கூடி அனுஷ்டிக்கின்றார்கள் என்றால் அம்மக்களின் வேதனைகளை  எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே மே 18 நாளுக்குரிய தீர்வினை இலங்கை அரசாங்கமும் , சர்வதேச நாடுகளும்  வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.