அரசாங்கத்தின் நகர்வுகள் மறுசீரமைப்புக்கள் குறித்த கடப்பாட்டை கேள்விக்குள்ளாக்குகின்றன

198 0

ஊடக சுதந்திரம் என்பது இயங்குநிலையில் உள்ள ஜனநாயகக் கட்டமைப்பிலேயே உயிர்ப்புடன் இருக்கும். அவ்வாறிருக்கையில் ஆட்சியியல் மறுசீரமைப்பு மற்றும் சிவில்சமூக அமைப்புக்களுடனான ஒத்துழைப்பு என்பவற்றை அரசாங்கம் தொடர்ந்து புறந்தள்ளுவது ஆக்கபூர்வமான மறுசீரமைப்புக்கள் குறித்து அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை கேள்விக்குட்படுத்துகிறதென சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இயங்கிவரும் சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இதுபற்றி மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

திறந்த அரசாங்க ஒத்துழைப்பு செயன்முறை என்பது 2011 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பிரேஸில், இந்தோனேசியா, மெக்சிகோ, நோர்வே, பிலிப்பைன்ஸ், தென்னாபிரிக்கா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய தொடக்க உறுப்பு நாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட உலகளாவிய பல்தரப்பு ஒத்துழைப்பு செயற்திட்டமாகும்.

தற்போது இச்செயன்முறையில் 75 நாடுகளும், ஆயிரக்கணக்கான சிவில் சமூக அமைப்புக்களும் அங்கம் வகிக்கின்றன. இந்த உறுப்புநாடுகள் சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து ஆட்சியியல் மறுசீரமைப்பு நடைமுறைகள் தொடர்பில் பல்தரப்பு ஒத்துழைப்புடன் இரண்டு வருடங்களுக்கான தேசிய செயற்திட்டத்தைத் தயாரிக்கவேண்டும்.

கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டி, மிகமுக்கிய வரலாற்று ரீதியிலான அரசியல் நிலைமாற்றம் இடம்பெற்றதை அடுத்து, திறந்த அரசாங்க ஒத்துழைப்பு செயன்முறையின் கீழான கடப்பாடுகளுக்கு அமைவாக இலங்கை செயற்படும் என்ற எதிர்பார்ப்பு உருவானது.

குறிப்பாக இலங்கைக்கான இச்செயன்முறையில் அங்கம்வகிக்கும் சிவில் சமூக அமைப்புக்களின் இணை ஒருங்கிணைப்பாளர்களான ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா மற்றும் சர்வோதயம் ஆகிய அமைப்புக்கள், திறந்த அரசாங்க ஒத்துழைப்பு செயன்முறையிலிருந்து இலங்கை வெளியேற்றப்படக்கூடிய அச்சுறுத்தல் காணப்படும் நிலையில், அச்செயன்முறையில் அரசாங்கம் மீண்டும் பங்கேற்கவேண்டும் என கடந்த 7 ஆம் திகதி வலியுறுத்தியிருந்தன.

இச்செயன்முறை விடயத்தில் இலங்கை தொடர்ந்து அமைதிகாப்பது செயற்திறன்மிக்க ஆட்சியியல் நிர்வாகம் வலுவிழந்திருப்பதைக் காண்பிப்பதாகவும், அரச கட்டமைப்புக்கள் மீதான நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு வெளிப்படைத்தன்மை வாய்ந்தததும், சகல தரப்பினரையும் உள்ளடக்கியதுமான செயன்முறை அவசியம் எனவும் அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

இந்நிலையில் திறந்த அரசாங்க ஒத்துழைப்பு செயன்முறையைப் பொறுத்தமட்டில் தற்போதைய புதிய அரசாங்கம் கடந்த அரசாங்கங்களின் அக்கறையீனப்போக்கையே தொடர்ந்து பின்பற்றுகின்றன.

திறந்த அரசாங்க ஒத்துழைப்பு செயன்முறையின்கீழ் முன்னைய அரசாங்கங்கள் கடந்த 2021, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக தேசிய செயற்திட்டத்தை சமர்ப்பிப்பதற்குத் தவறியதன் விளைவாக, அச்செயன்முறையின் ஒருங்கிணைப்புக்குழு கடந்த ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி இலங்கையை இயங்குகை அற்ற உறுப்பினராக  அடையாளப்படுத்தி தீர்மானமொன்றை நிறைவேற்றியது.

ஊடக சுதந்திரம் என்பது இயங்குநிலையில் உள்ள ஜனநாயகக் கட்டமைப்பிலேயே உயிர்ப்புடன் இருக்கும். அவ்வாறிருக்கையில் ஆட்சியியல் மறுசீரமைப்பு மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுடனான ஒத்துழைப்பு என்பவற்றை அரசாங்கம் தொடர்ந்து புறந்தள்ளுவது ஆக்கபூர்வமான மறுசீரமைப்புக்கள் குறித்து அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை கேள்விக்குட்படுத்துகிறது என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.