கொழும்பு பொது நூலகத்தில் புதிய கொரிய மொழி ஆசிரியர்!

91 0
கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (KOICA) முன்னெடுத்துள்ள “உலக கொரியா நண்பர்கள்” (World Friends Korea) திட்டத்தின் கீழ், பார்க் யாங் ஹியுன் (PARK YOUNG HYUN) என்பவர் இலங்கைக்கு புதிதாக வருகை தந்த ஆறாவது கொரிய தன்னார்வலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மேல் மாகாண சபையின் கீழ் செயல்படும் கொழும்பு பொது நூலகத்தில் கொரிய மொழி ஆசிரியராக தனது கடமைகளை மேற்கொள்ளவுள்ளார்.

நூலகத்திற்குள் இயங்கும் “கொரியன் கார்னர்” மையத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தனது மொழி அறிவும், அனுபவங்களும் பகிர்ந்துகொள்ளவுள்ள இவர், சமூக முன்னேற்றத்துக்கும் தொழில் அபிவிருத்திக்கும் துணையாக இருக்க எதிர்பார்க்கப்படுகிறார்.

பார்க் யாங் ஹியுன், கடந்த ஜூன் 23ஆம் திகதி தனது பங்காளர் நிறுவனத்தில் அதிகாரபூர்வமாக பணியமர்த்தப்படவுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி,  கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் திட்டத்தின் கீழ் 13 கொரிய தன்னார்வலர்கள் இலங்கையில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், கொரிய அரசாங்கத்தின் மானிய உதவித் திட்டமாக 1991ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதோடு, இலங்கையில் 1991 முதல் பல்வேறு அபிவிருத்தி முயற்சிகளை இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதே கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் தற்போதைய முக்கிய கவனமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.