வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத் தலைவர் முகமது யூனுஸ், நமது நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்து மீண்டும் ஒருமுறை பரபரப்பான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
நேபாள துணை சபாநாயகருடனான சந்திப்பின் போது, வங்கதேசம், நேபாளம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையே விரிவான பொருளாதார ஒருங்கிணைப்புக்கான திட்டத்தின் அவசியத்தை அவர் குறிப்பிட்டார். இது விவாதப் பொருளாக மாறியது.
நேபாளத்தைச் சேர்ந்த உயர்மட்ட பிரதிநிதியுடனான சந்திப்பின் போது, நீர் மின்சாரம், சுகாதாரம், போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற முக்கிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து முகமது யூனுஸ் பேசினார். இந்த விவாதங்களின் ஒரு பகுதியாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்தக் கருத்துக்கள், யூனுஸ் தலைமையிலான வங்கதேசம், இந்தியாவுடனான அதன் பாரம்பரிய கூட்டணியிலிருந்து வேறுபட்டு செயல்படுகிறது என்ற வாதங்களை மேலும் வலுப்படுத்தின.
சமீபத்தில் சீனாவில் முகமது யூனுஸ் பேசுகையில், \”இந்தியவாவில் வடகிழக்கு மாநிலங்கள் ‘ஏழு சகோதரிகள்’ என்று அழைக்கப்படுகின்றன. அவை வங்காளதேசத்துடன் நிலத்தால் சூழப்பட்டுள்ளன. அவற்றுக்கு கடல் அணுகல் இல்லை. இந்தப் பிராந்தியத்தில் நாம் கடலுக்கான நுழைவாயிலாக இருக்கிறோம். சீனா தனது வியாபார வழிகளை விரிவுபடுத்த இது நல்ல சந்தர்ப்பம்\” என்று பேசியிருந்தார்.

