ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும்

76 0

ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தில் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் தற்காலிக பருவ கால ஊழியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று (14) ஆனையிறவு உப்பளத்தின் முன்பாக முன்னெடுத்திருந்தனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆனையிறவு உப்பு உற்பத்தி மையத்தில் தற்காலிகமாக இணைத்துக்கொள்ளப்பட்ட பருவ கால ஊழியர்கள்  தங்களுக்கான நிரந்தர  நியமனம் வழங்கப்படாமல் உள்ளமை, உரிய காலத்தில்  உரிய வேதனம் வழங்கப்படாமை என்பவற்றை சுட்டிக்காட்டியும் ஆனையிறவில்  உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பினை வெளியிடங்களுக்கு கொண்டுசென்று பதனிட வேண்டாம் என்று தெரிவித்தும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டத்தில்  ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேஷ் சந்திரகுமார் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி நிலைமையை கேட்டறிந்துள்ளார்.

அதனையடுத்து, குறிப்பிட்ட இடத்துக்கு கிளிநொச்சி பொலிஸார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டக்காரர்களுடனும்  உப்பள  முகாமையாளர்களுடனும் கலந்துரையாடியதன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை இன்று மாவட்ட அதிபர் முரளிதரனிடம் கையளித்துள்ளனர்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த அரச அதிபர் முரளிதரன், கிளிநொச்சி ஆனையிறவு உப்பு உற்பத்தி கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தங்களுடைய தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக மகஜர் ஒன்றினை கையளித்திருக்கின்றார்கள்.

இந்த பணியாளர்களின் கோரிக்கை உரிய  அமைச்சுக்கும் அதன் தலைவருக்கும் விரைவாக  அனுப்பி வைக்கப்பட்டு, இவர்களது கோரிக்கைகள் நிறைவேறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.