இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் திங்கட்கிழமை காலாவதியான இராணுவ வெடிமருந்துகளை அகற்றும் நடவடிக்கையின் போது இடம்பெற்ற வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக இராணுவ அதிகாரிகள் அந்நாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
ஒரு வருடத்திற்குள் காலாவதியான வெடிமருந்துகள் சம்பந்தப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
இந்தோனேசிய இராணுவம் காலாவதியான வெடிமருந்துகளை தலைநகரில் இருந்து சுமார் 300 கிலோ மீற்றர் (190 மைல்) தொலைவில் உள்ள மேற்கு ஜாவா மாகாணத்தின் கருட் மாவட்டத்தில் உள்ள குழி ஒன்றில் வெடிக்கச் செய்து அப்புறப்படுத்த முயன்றபோது இந்த வெடிப்பு விபத்து நிகழ்ந்துள்ளது.
குழிக்குள் டெட்டனேட்டரை வெடிக்கச் செய்ய முற்பட்ட போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு 13 பேர் உயிரிழந்ததாக இராணுவ ஊடகப் பேச்சாளர் வஹ்யு யுதாயனா தெரிவித்துள்ளார்.
வெடிவிபத்து இடம்பெறுவதற்கு முன்பாக இரண்டு தொகுதி வெடிமருந்துகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜகார்த்தா அருகே காலாவதியான வெடிமருந்துகளை சேமித்து வைத்திருந்த இராணுவக் கிடங்கில் பெரும் தீ விபத்தை அடுத்து தொடர் வெடிப்பு சம்பவங்கள் ஏற்பட்டன.
வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் தீயணைப்பு பிரிவு இருந்தமையினால் குடியிருப்பாளர்களை அதிகாரிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர். இதனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

