நாட்டில் உப்பு தட்டுப்பாடு : உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம் !

101 0
image
நாட்டில் உள்ளூர் சந்தையில் உப்புக்கு தட்டுப்பாடு நிலவுவது தொடர்பில் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு நாட்டை வந்தடைவதில் ஏற்பட்டுள்ள தாமதமே இவ்வாறு உப்புக்கு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியார்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

30 மெட்ரிக்தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி அளித்திருந்தாலும், அதனை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால் சந்தையில் உப்புக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளாதாகவும் இதனால் உப்புக்கு தட்டுப்பாடும் விலை உயர்வும்  ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியார்கள் சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட உப்பு எதிர்வரும் வாரத்திற்குள் நாட்டை வந்தடையும் எனவும் அதன் பின்னர் உப்புக்கு தட்டுப்பாடு நிலவாதென்றும் அச் சங்கத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், சந்தையில் உப்புக்கான விலை கடுமையாக அதிகரித்துள்ளதாக நுகர்வோரும் வர்த்தகர்களும் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் சில பகுதிகளில் ஒரு கிலோகிராம் கட்டி உப்பு பையொன்றின் விலை 450 ரூபா முதல் 500 ரூபா வரையில் விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உப்புக்கான விலை உயர்வு நுகர்வோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலர் இது தொடர்பில் சமூக ஊடகங்களில் தங்களின் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உப்பு விலை அதிகரிப்பு தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.