உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி வடக்கு,கிழக்கில் 35சபைகளில் முதல்நிலை பெற்றுள்ள நிலையில் அச்சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு தார்மீக அடிப்படையில் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கட்சியின் அரசியல்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும், பதில்பொதுச்செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (11) வவுனியாவில் உள்ள கட்சியின் மாவட்டக்கிளை அலுவலகத்தில் பிற்பகல் 3மணிக்கு நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சாணக்கியன், கலையரசன், சத்தியலிங்கம், குலநாயகம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, இலங்கைத் தமிழரசுக்கட்சி பெரும்பான்மை பெற்றுள்ள கரைச்சி, பூநகரி, புதுக்குடியிருப்பு, மற்றும் மட்டக்களப்பு மண்முனை மேற்கு ஆகிய சபைகளில் மட்டுமே அறுதிப்பெரும்பான்மையை தமிழரசுக்கட்சி கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், ஏனைய சபைகளில் எவ்வாறு ஆட்சிஅதிகாரத்தினைக் கைப்பற்றுவது என்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இச்சமயத்திலேயே மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு மணிநேரம் வரையில் நடைபெற்ற குறித்த கூட்டம் சம்பந்தமாக சுமந்திரன் தெரிவிக்கையில்,
நடைபெற்று நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 58சபைகளில் போட்டியிட்டிருந்தது. அதில் 35 சபைகளில் முன்னிலை பெற்றுள்ளது.
அந்த வகையில் பெரும்பான்மை ஆசனங்களை பெற்ற கட்சி என்ற அடிப்படையில் எமது கட்சி ஆட்சி அமைப்பதற்குரிய ஒத்துழைப்புக்களை ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகள் வழங்க வேண்டிய தார்மீக கடமையைக் கொண்டிருக்கின்றன என்று தீர்மானித்துள்ளோம்.
அந்த வகையில் மேயர் மற்றும் தவிசாளர் பதவிகளுக்கு குறித்த சபைகளில் எமது கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் முன்மொழியப்படவுள்ளனர்.
வடக்கு,கிழக்கு மொழிவாரியான பிராந்தியமாகும். அந்தப் பிராந்தியத்தில் சமஷ்டி அடிப்படையில் அதிகாரப்பகிர்வினை கோருகின்ற கட்சியாக இலங்கைத் தமிழரசுக்கட்சி கடந்த ஏழுக்கும் மேற்பட்ட தசாப்தங்களாக செயற்பட்டு வருகின்றது.
அந்தவகையில் தான் தமிழ் பேசும் கட்சிகள் எமது கட்சி ஆட்சி அமைப்பதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று கோருகின்றோம்.
மேலும், இயற்கையாகவே, அதிக ஆசனங்கள் பெற்ற தரப்பினை ஆட்சி அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவது முறைமையாகும்.
அந்தவகையில் ஏனைய தமிழ், முஸ்லிம் தரப்புக்கள் எமக்கான ஒத்துழைப்புக்களையும், ஆதரவினையும் வழங்கும் என்ற நம்பிக்கை எமக்கு வலுவாக உள்ளது.
அதுமட்டுமன்றி, இலங்கைத் தமிழரசுக்கட்சி முன்னிலை பெறாத சபைகளில் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகள் முன்னிலை பெற்றிருக்கும் பட்சத்தில் அக்கட்சிகள் ஆட்சியமைப்பதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.

