இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் !

98 0

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியன இரு தரப்பு போர் நிறுத்தத்துக்கு இணங்கியிருக்கின்றன.

இந்த அறிவிப்பை இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரியும், பாகிஸ்தான் உதவி பிரதமர் இஷாக் டார்ரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவ நிலைகள் மீது தாக்குதல்கள் மற்றும் பதில் தாக்குதல்களை நடத்திய பின்னர், “முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு” இணங்கயுள்ளமையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார்.

காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்ப காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.

இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் பதில் தாக்குதல் மேற்கொண்டது.

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தானுக்கிடையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தான் துணை பிரதமர் இசாக் தார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், “பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டது. பாகிஸ்தான் எப்போதும் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்தியா போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.