அமெரிக்க தீர்வை வரி குறித்து அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கு வர்த்தக நிறுவன பிரதிநிதிகள் குழு அனுமதி

65 0

பொருளாதாரம் ஸ்திரமடைந்ததால் தான் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.  இந்த ஆண்டுக்குள் வெளிநாட்டு கையிருப்பை 7 பில்லியன் டொலர்களாக அதிகரித்துக் கொள்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை வரி தொடர்பான அடுத்தககட்ட பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவின் வர்த்தக நிறுவன பிரதிநிதிகள் குழு அனுமதியளித்துள்ளதென நிதி பிரதி அமைச்சர்  ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) நடைபெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ‘அ’ அட்டவணையின் ஒழுங்குவிதிகளின் கீழ் இறக்குமதித் தீர்வைக் கட்டணங்கள் தொடர்பில்  பிரசுரிக்கப்பட்ட  வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில்  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

வருமான பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் சுங்கம் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட இந்த வர்த்தமானி தொடர்பில் விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வாகன இறக்குமதி இதில் பிரதான அம்சமாக காணப்படுகிறது.  2022 ஆம் ஆண்டு  பொருளாதார நெருக்கடியின் போது வாகன  இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் வெற்றிப் பெற்றன. இதன் பிரதிபலனாகவே  பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது.இதன் பின்னரே வாகன இறக்குமதிக்கு கட்டம் கட்டமாக அனுமதி வழங்கப்பட்டது.  தனியார் தரப்பினர் பெருமளவிலான வாகனங்களை தற்போது இறக்குமதி செய்துள்ளனர்.

நிறைவடைந்த 6 மாத காலத்தில் பொருளாதாரம் குறித்து   பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.  அனைத்து குற்றச்சாட்டுக்களும் பொய்யாக்கப்பட்டுள்ளன.

நாட்டின் வெளிநாட்டு  கையிருப்பு  6.5 பில்லியன் டொலர்களாக   நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டுக்குள் வெளிநாட்டு கையிருப்பை 7 பில்லியன் டொலர்களாக அதிகரித்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

அரச மற்றும் தனியார் தொழில் முயற்சியாண்மை மேம்பாட்டுக்குரிய  நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இந்த ஆண்டு  அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம். ஆகவே பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்த  நடவடிக்கைகள் வெற்றிப்பெற்றுள்ளன.

அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட பரஸ்பர தீர்வை வரி பொருளாதாரத்துக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் காணப்பட்டது. 90 நாட்கள் காலவகாசம் வழங்கப்பட்டது. இந்த சவாலை வெற்றிக்கொள்வதற்கு ஜனாதிபதி துரிதகர நடவடிக்கைகளை இராஜதந்திர மட்டத்தில் மேற்கொண்டார்.

தீர்வை வரி  தொடர்பில்  அமெரிக்காவின் வர்த்தக நிறுவன பிரதிநிதிகளுடன்  இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். தற்போது அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை வரி  விவகாரத்தில் இலங்கைக்கு சாதகமான தீர்மானத்தை பெற்றுக்கொள்வோம் என்றார்.