கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலைக்கு அருகில் 8 வயது மாணவி ஒருவரை கடத்திச் செல்ல முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கறுவாத்தோட்டம் பிளவர் வீதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் கடந்த வெள்ளிக்கிழமை (2) பிற்பகல், பாடசாலை நிறைவடைந்ததும் 8 வயதுடைய மாணவி ஒருவரை அழைத்துச் செல்ல அவருடைய தாயார் காரில் வருகை தந்துள்ளதுடன் மாணவியை காரின் பின் இருக்கையில் அமர வைத்த போது, இனந்தெரியாத ஒருவர் வலுக்கட்டாயமாக காரின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டார். குறித்த நபர் மாணவியின் தாயை காரை முன்னோக்கி செலுத்துமாறு கட்டாயப்படுத்திய நிலையில்.
காரில் இருந்து இறங்கிய தாய் அருகில் இருந்தவர்களிடம் உதவி கோரியுள்ளார். இதன்போது பாடசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வருவதை அவதானித்த சந்தேகநபர் அங்கிருந்து தப்பி சென்றிருந்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை (7) மேற்படி சந்தேகநபர் கொலன்னாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். கைதான நபர் 36 வயதுடைய கொலன்னாவ , வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்தவராவார்.
இதேவேளை சம்பவ இடத்திலிருந்து விலகிச் சென்ற சந்தேகநபர் வாடகை கார் ஒன்றின் மூலம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

