பதுளை மாவட்டத்தில் சுமார் 8 ஆயிரம் தேர்தல் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும் பதுளை மாவட்ட செயலாளருமான பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன தெரிவித்தார்.
மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து கூறுகையில்,
மாவட்டத்தில் உள்ள இரு மாநகர சபைகள், ஒரு நகரசபை, 15 பிரதேச சபைகளுக்கு 391 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் என்பவற்றிலிருந்து 3,441 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வாக்களிப்பதற்காக 576 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 230 வாக்கெண்ணும் நிலையங்களும், 217 தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிலையங்களும் தாபிக்கப்பட்டுள்ளன.
பதுளை பண்டாரவளை பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட 32 பொலிஸ் நிலையங்களில் உள்ள பொலிஸாரும், பொலிஸ் அதிரடிப்படையினரும், அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் கடமைகளுக்காக 700 வாகனங்கள் சேவையில் உள்ளன.
இந்நிலையில், இன்று திங்கட்கிழமை (05) காலை பதுளை மத்திய மகா வித்தியாலயம், தர்மதூத கல்லூரி என்பவற்றிலிருந்து வாக்குப் பெட்டிகள் மற்றும் ஆவணங்கள் வாக்குச் சாவடிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டன. இப்பணி நண்பகல் 12.30 மணியளவில் நிறைவு பெற்றது.
அதனை தொடர்ந்து, நாளை செவ்வாய்க்கிழமை (06) மாலை 4.15 மணிக்கு வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகும் என்றார்.

