முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த, மைத்திரி, கோட்டபய மற்றும் ரணில் ஆகியோர் கடைப்பிடித்த கொள்கைகளையே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுத்துச் செல்கிறார் என்பதை தொழிற்சங்கவாதிகள் தற்போது நன்கு விளங்கிக்கொண்டுள்ளார்கள். அடிப்படை கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தான் மக்கள் விடுதலை முன்னணி கட்சிக்குள் இருந்து ஜனாதிபதிக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சனிக்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையில் இரண்டு விடயங்களை விசேடமாக குறிப்பிட்டிருந்தார்.வரலாற்றில் முதல் தடவையாக மக்கள் விடுதலை முன்னணி மே தினத்தன்று பேரணி செல்லவில்லை.
தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து பேரணி சென்றால் தொழிற்சங்கவாதிகள் தமது உரிமைகளை கோருவார்கள்,அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்பார்கள் என்ற அச்சத்தின் தான் மக்கள் விடுதலை முன்னணி இம்முறை மே தினத்தன்று பேரணியாக செல்லவில்லை. தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் அரசாங்கத்துக்கு எதிராக அமையலாம் என்பதை ஜனாதிபதி நன்கு அறிவார்.
எதிர்க்கட்சிகள் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். எதிர்க்கட்சிகள் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாயின் ஜனாதிபதி உட்பட அரசாங்கம் என்ன செய்கிறது. ஜனாதிபதி இன்று தனித்து விடப்பட்ட நிலையில் உள்ளக நிலையில் சவால் இருப்பதாக குறிப்பிடுகிறார்.
தேசிய மக்கள் சக்தி பொய் மற்றும் வெறுப்பினை மாத்திரம் முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்தது. மக்களுக்கு வழங்கிய போலியான வாக்குறுதிகளுக்கு மாறாகவே அரசாங்கம் இன்று செயற்படுகிறது.இதனால் தான் அரசாங்கத்துக்குள் இருந்து முதலாவதாக ஜனாதிபதிக்கு சவால் தோற்றம் பெற்றுள்ளது.
மஹிந்த, மைத்திரி, கோட்டபய மற்றும் ரணில் ஆகியோர் கடைப்பிடித்த கொள்கைகளையே தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுத்துச் செல்கிறார் என்பதை தொழிற்சங்கவாதிகள் தற்போது நன்கு விளங்கிக்கொண்டுள்ளார்கள். அடிப்படை கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தான் மக்கள் விடுதலை முன்னணி கட்சிக்குள் இருந்து ஜனாதிபதிக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மே தின கூட்டத்தில் தொழிலாளர் உரிமை மற்றும் தொழில் உரிமைகள் பற்றி பேசினார். ஆனால் தற்போது சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆடையை அணிந்துக்கொண்டுள்ளார். அரசாங்கத்தின் போலியான செயற்பாடுகளுக்கு எதிரான பெறுபேறு நாளை மறுதினம் கிடைக்கும் என்றார்.

