டிக்டொக் செயலிக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம்!

139 0

சமூக ஊடகத் தளமான டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தரவு பாதுகாப்பு ஆணையகமான அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையம் (DPC) 530 மில்லியன் யூரோக்கள் (சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அபராதம் விதித்துள்ளது.

வெளிப்படைத் தன்மை இல்லாததால் குறித்த அபராதத் தொகையை, டிக்டொக் நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையகம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், 6 மாதங்களுக்குள் விதிகளுக்கு இணங்கவும் உத்தரவிட்டடுள்ளது.

ஐரோப்பிய பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை சட்டவிரோதமாக சீனாவிற்கு மாற்றியதாகவும், அவை சீன அதிகாரிகளின் அணுகலில் இருந்து பாதுகாக்கப்படவில்லை என உறுதிப்படுத்தத் தவறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சீனாவுக்கு சொந்தமான சமூக ஊடக செயலியான டிக்டொக் நிறுவனம், தங்கள் பயனர்களின் தரவுகள் எங்கு அனுப்பப்படுகிறது என்பது குறித்து வெளிப்படையாக இல்லையென ஐரோப்பிய ஒன்றியத்தின் தனியுரிமைக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இது ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை (GDPR) விதிகளை மீறியதற்காக விதிக்கப்பட்ட மூன்றாவது பெரிய அபராதமாகும்.

கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்ட இந்த வழக்கில் மேன்முறையீடு செய்ய டிக்டொக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதேவேளை, பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்தியா மற்றும் அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.