ஆந்திராவில் கோவில் சுவர் இடிந்து விழுந்து 9 பேர் பலி ; பலர் காயம்!

144 0

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம கோவில் சுவர் இன்று புதன்கிழமை (30) அதிகாலை பலத்த மழைக்கு மத்தியில் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்ததாக இந்திய செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்மாசலம் மலையில் அமைந்திருக்கும் இந்த கோயிலின் சந்தனோத்சவம் திருவிழாவை முன்னிட்டு ஆலய தரிசனத்துக்காக பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகை தந்திருந்த நிலையிலேயே ஆலயத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது.

இந்த சுவர் புதிதாக கட்டப்பட்டு 20 நாட்களேயான நிலையில், மழையுடனான கடும் காற்று காரணமாக இடிந்து விழுந்து உயிரிழப்பை ஏற்படுத்தியதாகவும் சுவரின் அடித்தளம் பலவீனமாக அமைக்கப்பட்டதாலேயே இந்த விபத்து நேர்ந்ததாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆலயத்தில் பக்தர்கள் கட்டணம் செலுத்தும் வரிசையில் நின்றிருந்தபோது அருகில் காணப்பட்ட சுவர் இடிந்து விழுந்ததில் பக்தர்கள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில், சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்ததோடு, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுவர் இடிந்து வீழ்ந்தமை தொடர்பாக தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.