இந்த நாட்டிலே வன்முறை அரசியல் இல்லாமல் போகும். திருட்டு அரசியல் இல்லாமல் போகும். தற்போது நிறைய அரசியல்வாதிகள் பயந்து போய் உள்ளனர். நிறைய பேரின் பயில் மேலே வந்துள்ளது. இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் சில முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது என தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலஃபர் தெரிவித்தார்.
மன்னார் உப்புக்குளம் பகுதியில் நேற்று (29) இரவு வேட்பாளர் எம்.எச்.எம்.பாஹிம் தலைமையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது அமைச்சிற்கு கீழ் சமாதான சகவாழ்வு மையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன. நான் தெற்கைச் சேர்ந்தவன். தெற்கில் பெரும்பான்மை சமூகத்துடன் இணைந்து அரசியல் செய்து வருகின்றேன். அங்குள்ள எமக்கு கிடைக்கும் செய்தி வடக்கில் இருக்கின்ற மக்கள் ஒற்றுமை இன்றில் இருப்பதாக செய்திகள் கிடைக்கிறது.
ஆனால் மன்னாரிற்கு வந்து நேரடியாக பார்க்கின்ற போது அவ்வாறு எதுவும் இல்லை. இங்கு தமிழ் முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக மிகவும் அன்பாகவும் வாழும் காட்சியை பார்க்கிறேன். எமது நாட்டில் சமாதானம் இல்லாமல் போவதற்கு காரணம் என்பது குறித்து ஜேர்மன் நாட்டில் ஆய்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த நாட்டிலே தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களுக்கு இடையில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இவ்விடயம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகளின் முடிவில் கூறப்பட்ட விடயம் எமது நாட்டில் இனங்களுக்கு இடையிலும்,மதங்களுக்கு இடையிலான பிரச்சனை ஏற்படுவதற்கான முதல் தர காரணி அரசியல் வாதிகள் என்று. இரண்டாவது காரணம் மொழி.
அமைச்சை நான் பாரம் எடுத்த போது உணர்ந்த விடையம் தான் வடக்கிலே வாழக்கூடிய மக்கள் அதிகம் தமிழ் மொழியில் பேசக் கூடியவர்கள் என்று. அவர்களுக்கு ஏதும் பிரச்சினைகள் வருகின்ற போது பொலிஸ் நிலையங்களுக்கு செல்லுகின்ற போது அங்குள்ள பொலிஸார் பலருக்கு தமிழ் மொழி தெரியாது.அங்கும் சில பிரச்சனைகள் ஏற்படும்.

