சீனாவில் உணவகத்தில் தீ விபத்து ; 22 பேர் பலி

109 0
சீனாவின் லியோனிங் மாகாணத்தின் லியோயாங் நகரில் உணவகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதோடு, 3 பேர் காயமடைந்துள்ளதாக பீஜிங்கின் அரசாங்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தீ விபத்து தலைநகர் பீஜிங்கிலிருந்து வடகிழக்கே சுமார் 580 கிலோமீட்டர் (360 மைல்) தொலைவில் உள்ள லியோயாங் நகரில் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

தீ விபத்து குறிப்பிடத்தக்க உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மிகவும் தீவிரமானவை என சீன ஜனாதிபதி சி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, “காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்குமாறும், உயிரிழந்தவர்கள் தொடர்பில் முறையாக கையாளுமாறும், அவர்களது குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கவும், தீ விபத்துக்கான காரணத்தை விரைவாகக் கண்டறியவும், சட்டத்தின்படி பொறுப்புக்கூறலைத் தொடரவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இரண்டு அல்லது மூன்று மாடி கட்டிடத்தின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளிலிருந்து பெரிய தீப்பிழம்புகள் மற்றும் புகைகள் வெளியேறும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

சீனாவில் அடிக்கடி தீ விபத்து சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது.

இம் மாதம், வடக்கு சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில்  ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜனவரி மாதம், பீஜிங்கின் வடமேற்கே உள்ள ஜாங்ஜியாகோ நகரில் உள்ள காய்கறி சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதோடு,  15 பேர் காயமடைந்துள்ளனர்.

இதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், கிழக்கு சீனாவின் ரோங்செங் நகரில் உள்ள  கட்டுமான இடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.