வடக்கு-தெற்கு மாணவர்களிடையே நட்புறவு சந்திப்பு : சென்.ஹென்றிஸ் கல்லூரியில் நிகழ்வு

67 0

வடக்கு மற்றும் தெற்கு மாணவர்களிடையே நட்புறவை ஏற்படுத்தும் வகையில், நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஒரு சந்திப்பு நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் இளவாலை சென்.ஹென்றிஸ் கல்லூரியில் நடைபெற்றது.

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் ஆலோசனைக்கு அமைய, வடக்கு மற்றும் தெற்கு மாணவர்களை ஒன்றிணைத்து புரிந்துணர்வை வளர்க்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

காலி, அம்பேகம ஸ்ரீ நந்தசாரா வித்தியாலயத்தைச் சேர்ந்த சிங்கள மாணவர்கள், இளவாலை சென்.ஹென்றிஸ் கல்லூரி மாணவர்களால் பேண்ட் இசைக்குழுவுடன் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.

இதனையடுத்து, இரு பாடசாலை மாணவர்களும் இணைந்து கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதன்போது, தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் பரஸ்பர உரையாடலில் ஈடுபட்டு நட்புறவை வளர்த்துக்கொண்டனர்.

மேலும், இரு பாடசாலை மாணவர்களும் ஒருவருக்கொருவர் அன்பளிப்புப் பொருட்களை வழங்கி மகிழ்ந்தனர்.

நிகழ்வில், காலி அம்பேகம ஸ்ரீ நந்தசாரா வித்தியாலயத்தைச் சேர்ந்த 50 மாணவர்களும், யாழ்ப்பாணம் இளவாலை சென்.ஹென்றிஸ் கல்லூரியைச் சேர்ந்த 60 மாணவர்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமெரிக்காவில் வசிக்கும் சேனக செனவிரத்ன நிதியுதவி வழங்கியுள்ளார்.