வெள்ளவத்தை, சுவர்ணா வீதியில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் சந்திப்பு 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்துத் தெரிவித்த வெள்ளவத்தை வடக்கு வேட்பாளரான ஆர்.பிரணவா,
நானும் சகோதரி முத்துக்குமாரியும் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் வெள்ளவத்தை வடக்கு வட்டார வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றோம்.
தேர்தல் களத்தில் நாம் இருவரும் புதியவர்கள், ஆனால் சமூகசேவையில் ஏறத்தாழ 15 வருடங்கள் ஈடுபடுகின்றோம்.
குறிப்பாக ஐ.தே.கவின் இளைஞர் அணியில் பிரதான இடத்தை நான் வகிக்கும் போது கொழும்பு மற்றும் களுத்துறையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மீரியபெத்தை மண்சரிவு, கொரோனா காலத்தில் நிவாரணப்பணிகள் போன்றவற்றை செய்ததோடு வசதி குறைந்த மாணவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் பாடசாலை உபகரணங்களை வழங்கி வருகின்றேன்.
இன்று உங்கள் முன்னிலையில் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் வந்து தமக்கு வாக்களிக்கும்படி கேட்பார்கள். குறிப்பாக ஆளும் கட்சியில் இன்று போட்டியிடுகின்ற பலர் முன்னர் இருந்த அரசாங்கங்களில் பதவி வகித்தவர்கள்.
அதேபோல் முன்னைய மாநகரசபை உறுப்பினர்களில் சிலர் இன்று பணக்காரர்களின் கட்சியில் பதக்கங்கள் அணிந்து பதவியை தரும்படி மீண்டும் கேட்பார்கள். எமக்கும் செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் ஒரே பாதையில் பயணிக்கின்றோம்.
சகோதரி முத்துக்குமாரி ஐக்கிய மக்கள் சக்தியில் நீண்ட காலம் உழைத்தும் ஓரங்கட்டப்பட்டதால் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுகின்றார்.
எம்மை நீங்கள் வாக்களித்து வெல்லவைக்கும் சமயத்தில் வீதிகளை அபிவிருத்தி செய்தல், வடிகான் அமைப்புக்களை மேம்படுத்தல், மக்களுக்கு அச்சுறுத்தலான மரங்களை அகற்றுதல், பொது சுகாதார வசதிகளை மேம்படுத்தல், நுளம்பினால் ஏற்படும் நோய்களை தடுப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துதல், முறையான வீதி விளக்குச் சேவைகளை நடைமுறைப்படுத்தல், இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் பூங்காக்களை மேம்படுத்தல், பெண்களுக்கான வாழ்வாதார செயற்றிட்டங்களை உருவாக்குதல் போன்றவற்றை நாம் செய்வோம்.
அரசியலை தொழிலாகச் செய்யவேண்டிய தேவை ஏனையவர்களைப் போல் எமக்கில்லை. மக்களின் பூரண ஆதரவு கிடைத்து பிரதிநிதிகளாக இருக்கும் வரை முழுமையான சேவையாகக்கொண்டு செல்வோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

