பயங்கரவாத தடுப்புச் சட்டம் குறித்து முக்கிய அறிவிப்புக்கு தயாராகும் அரசு

104 0

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை எதிர்காலம் குறித்து தீர்மானிக்கும் வகையில் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் என்பன குறித்து முக்கிய தீர்மானங்களை எடுக்க உள்ளதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதனடிப்படையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்கவும், புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றவும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக நீக்காது திருத்தங்களை கொண்டு வரவுமே கருத்தில் கொண்டுள்ளதாக தகவல் மூலம் மேலும் உறுதிப்படுத்தியது.

எவ்வாறாயினும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் கண்காணிப்புக் குழு  திங்கட்கிழமை (28) இலங்கைக்கு விஜயம்  மேற்கொள்கிறது.

மே மாதம் 7 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் கண்காணிப்புக் குழு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் உட்பட அரச அதிகாரிகள், எதிரக்கட்சி அரசியல் தலைவர்கள், சிவில் சமூகம், வணிக சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் என பல தரப்பினரைளும் சந்தித்து பரந்துப்பட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளது.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையில் பயனடையும் குறைந்த அல்லது குறைந்த நடுத்தர வருமானம கொண்ட 8 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் நல்லாட்சி தொடர்பான 27 சர்வதேச மரபுகளை அங்கீகரித்த பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக கூடிய வளரும் நாடுகளிக் நலன் கருதி இந்த சலுகை வழங்கப்படுகிறது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெறும் நாடுகளை இரண்டு வருடங்களுக்கு ஒரமுறை மதிப்பீடு செய்து சலுகைக்கான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும்.

இவ்வாறானதொரு நிலையில்  மனித உரிமைகளின் பாதுகாப்புக்கு நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்பு சட்டம் கடும் சவாலாக உள்ளமையினால் அதன நீக்குவதற்கான பரிந்துரையை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே இலங்கைக்கு முன்வைத்துள்ளது.

எனவே ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை மீண்டும் நீட்டிக்கப்பட வேண்டுமானால், அரசாங்கம் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். அவற்றில்  முக்கியமானதொன்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதாகும்.

ஆனால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதாக எதிர்க்கட்சியில் இருந்தபோது தற்போதைய அரசாங்கம் பலமுறை கூறிய போதிலும், ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆன பிறகும் அதை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.

அண்மையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு இளைஞனைக் கைது செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. எனவே ஜி.எஸ்.பி சலுகையை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமாயின் பயங்கரவாத தடுப்பு சட்டம் குறித்து தீர்மானிக்க வேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது.

இதேவேளை, இலங்கை கையொப்பமிட்டுள்ள மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி தொடர்பான 27 சர்வதேச மரபுகளை செயல்படுத்த வேண்டும். இந்த உறுதிப்பாடுடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் தயாராகி வருகின்றது.

இலங்கையை பொறுத்த வரையில் அமெரிக்க பரஸ்பர வரி விதிப்பு நெருக்கடிக்கு இன்னும் நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ளாத நிலையில், ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பாதுகாப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனெனில் 450 மில்லியன் மக்கள் தொகை கொண்ட 27 உறுப்பு நாடுகளின் ஒற்றை சந்தை ஐரோப்பிய ஒன்றியமாகும்.

2024 ஆம் ஆண்டில் 2.7 பில்லியன் யூரோக்கள் ஏற்றுமதியுடன், இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி இடமாக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளது. இந்த ஏற்றுமதிகளில் சுமார் 85 வீதம் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை மூலம் ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் இலங்கை பயனடைகின்றமை குறிப்பிடத்தக்கது.