யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் முள்ளியான் உப அஞ்சல் அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டியதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களின் போதும் கட்டைக்காடு கிராமத்தின் பொது மண்டபங்களில் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டன.
இந்நிலையில் தேர்தல் பிரசாரத்திற்காக ஜனாதிபதியின் யாழ். வருகையை முன்னிட்டு முள்ளியான் உப அஞ்சல் அலுவலகம் அமைந்துள்ள கிராம பொது மண்டபங்களில் ஜனாதிபதியின் சுவரொட்டிகளை ஒட்டி கட்டிடங்களை அலங்கோலம் ஆக்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
தேர்தல் விதிமுறைகளை மீறி பொது இடங்களில் அநாவசியமாக சுவரொட்டிகளை காட்சிப்படுத்துபவர்களை கைது செய்யுமாறும் பொலிசாரை அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

