வவுனியாவில் அன்னை பூபதியின் 37ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு

99 0

வவுனியாவில் அன்னை பூபதியின் 37ஆவது நினைவு தினம் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள கொட்டகையில் குறித்த நிகழ்வு இன்று (19.04.2025) இடம்பெற்றுள்ளது

இதன்போது அன்னாரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயம்

இது தொடர்பாக கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர், தமிழ் மக்களின் இறைமையை பாதுகாப்பதற்காகவும், உரிமைகளுக்காகவும் தன்னை அர்ப்பணித்த அன்னைக்கான அஞ்சலியை தமிழர் தேசம் இன்று செலுத்திக் கொண்டிருக்கிறது.

தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தை சர்வதேச பொறிமுறையூடாக சர்வதேச மத்தியஸ்தத்தின் ஊடாகவே தீர்க்க முடியும். குற்றவாளிகளே பிரச்சினையை தீர்ப்பது நீதியாக அமையாது.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வை பெறுவதற்கு தமிழ் இறையாண்மை அவசியமான ஒன்று. அதனை நோக்கியே எமது போராட்டங்கள் அமைந்துள்ளது. எதிர்காலத்திலும் தமிழ் இறையாண்மை எமக்கு தேவை என்ற விடயத்தை தொடர்ச்சியாக சர்வதேசத்திற்கு உரத்துச் சொல்வோம் என குறிப்பிட்டுள்ளனர்.