நிகழ்நிலை காப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்காக புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தனிநபர் பிரேரணையாக முன்வைத்த “நிகழ்நிலை பாதுகாப்பு” தொடர்பான (இரத்துச் செய்தல்) சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பிரசுரிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
‘இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தால் ‘இந்த சட்டம் 2025ஆம் ஆண்டின்…. இலக்க நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான (இரத்துச் செய்தல்) சட்டமாக அடையாளப்படுத்தப்படும்.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் 2024ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டமானது இரத்தாகும் என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும்.
நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான (இரத்துச் செய்தல்) சட்டம் சான்றுரைப்படுத்தப்பட்ட தினத்தில் இருந்து 2024ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் பிரகாரம் ஏதேனும் ஒழுங்கு விதிகள் ஆக்கப்பட்டிருக்குமாயின் அவ்வாறான சகல ஒழுங்குவிதிகளும் இரத்துச் செய்யப்படும் என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும்.
இந்த சட்டத்தில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பில் ஏதேனும் முரண்பாடான தன்மை காணப்படுமாயின் சிங்கள மொழிமூல பிரதிகள் ஏற்புடையதாக கருத்திற்கொள்ளப்படும்’.
நிகழ்நிலை காப்புச் சட்டம் நாட்டில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சட்டம் தொடர்பில் சிவில் அமைப்பினர், ஊடகத்துறையினர் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் தீவிர கரிசணை கொண்டிருந்தனர். இந்த சட்டமூலம் இரண்டாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டவுடன் பல்வேறு தரப்பினர் இந்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த சட்டமூலத்துக்கு எதிராக 47அடிப்படை உரிமைமீறல் வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தில் ‘சட்டமூலத்தில் 32 சட்ட பிரிவுகளை நிறைவேற்ற வேண்டுமாயின் அரசியலமைப்பின் 84(2)ஆம் உறுப்புரையின் பிரகாரம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தது.
நீதிமன்றம் முன்வைத்துள்ள திருத்தங்கள் மற்றும் வழிமுறைகளுக்கு அமைய சட்டமூலத்தை நிறைவேற்றுவதாக இருந்தால், தனிப்பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்று உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டு, 2024.01.24ஆம் திகதி 46 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
அதனைத் தொடர்ந்து இந்த சட்டமூலத்தை அப்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றுரைப்படுத்தினார். 2024 ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டமாக அமுலுக்கு வந்தது.
இந்த சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் குழுநிலை வேளையின் போது கருத்திற்கொள்ளப்படவில்லை என்று எதிர்க்கட்சிகளும், சிவில் அமைப்பினரும் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இவ்வாறான பின்னணியில் இந்த சட்டத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தியதை சவாலுக்குட்படுத்தி இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடந்த ஆண்டு மார்ச் மாதமளவில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம் தொடர்பில் ஆராயும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு கிடையாது என்று குறிப்பிட்டு உயர்நீதிமன்றம் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் இரத்து செய்தது.
இவ்வாறான பின்னணியில் இந்த சட்டமூலத்தை இரத்து செய்வதாக தேசிய மக்கள் சக்தி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது. இந்த சட்டத்தின் பிரகாரம் எவரும் கைது செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
2024ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு காணப்படுகின்ற பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இந்த சட்டத்தை இரத்து செய்வதற்கான தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார்.

