அமெரிக்க சீன வர்த்தக போரின் தாக்கம் உலகின் அனைத்து பகுதிகளிலும் எதிரொலிக்கும்

99 0

அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போரின் தாக்கம் உலகின் அனைத்து பகுதிகளிலும் உணரப்படும் என சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வொங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தனது புதியவரிகளை இடைநிறுத்திவைத்துள்ளமை குறித்து சிறிதும் நிம்மதிபெருமூச்சு விடமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்காவின் அறிவிப்புகள் ஏற்கனவே உலகின் பல பகுதிகளில் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக போரினால் இரண்டு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகம் முற்றாக நின்றுபோகும் ஆபத்து ஏற்படும் என எச்சரித்துள்ள சிங்கப்பூர் பிரதமர் இதனால் ஏற்படும் மிக மோசமான பாதிப்பினை அந்த இரு நாடுகளும் மாத்திரம் அனுபவிக்கப்போவதில்லை முழு உலகமும் உணரப்போகின்றது என  குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தனது புதிய வரிகளை ஜூலை வரை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ள போதிலும் அமெரிக்கா பத்து வீத வரிகளை விதித்து வருகின்றது என தெரிவித்துள்ள அவர் ஒரு அறிவிப்பின் மூலம் வரிகள் எந்த நேரத்திலும் மாறலாம் என்ற நிலையில் எந்த நிறுவனமும் நீண்ட கால முதலீடுகள் குறித்து திட்டமிட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போர் இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகத்தை துண்டிக்கும்,என அவர் தெரிவித்துள்ளார்

நாங்கள் தற்போது பார்த்துக்கொண்டிருப்பது உலக பொருளாதாரத்தின் மறு உருவாக்கத்தை என தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர் ஆனால் இது ஒருங்கிணைந்த விதத்தில் இடம்பெறவில்லை மாறாக அமெரிக்கா சீனாவை மையமாக கொண்டதாக காணப்படுகின்றது எனசிங்கப்பூர் பிரதமர் தெரிவித்துள்ளார்.