என்னிடம் எதுவும் இல்லை! நித்திரை இன்றி சிறைக்குள் திணறும் பிள்ளையான்

116 0

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையானை) முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில சிறைக்கு சென்று சந்தித்து வந்திருந்தார்.

இந்த சந்திப்பு, நேற்றைய தினம், சுமார் 30 நிமிடங்கள் அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்த கலந்துரையாடல் தொடர்பான விடயங்களை ஊடக சந்திப்பு ஒன்று மேற்கொண்டு, உதய கம்மன்பில தெரியப்படுத்தவுள்ளதாக கூறப்பட்டது.

அது மாத்திரமன்றி பிள்ளையான், சிறையில் தனது நிலைமை குறித்து உதய கம்மன்பிலவிடம் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

அதன்படி, இலங்கையின் ஆட்சியாளர்கள் தன்னை பயன்படுத்தி விட்டு தூக்கி வீசி விட்டதாகவும், முதுகு வலியுடன் நிலத்தில் நித்திரை கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிள்ளையான் குறிப்பிட்டதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தனக்கு நித்திரை செய்வதற்கு கூட முறையான ஏற்பாடுகள் செய்திருக்கப்படவில்லை என பிள்ளையான் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.