இலங்கை ‘ஏ’ அணிக்கு அபார வெற்றி

13 0

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் முக்கோண ஒருநாள் தொடரில் இலங்கை ‘ஏ’ அணி ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணியினை 6 விக்கெட்டுக்களால் நேற்று (15) வெற்றிபெற்றது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை, அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றின் ‘ஏ’ அணிகள் பங்கெடுக்கும் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணி வீரர்கள் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தனர்.

இதன்படி முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 248 ஓட்டங்களை பெற்றது.

ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணி சார்பாக அதன் தலைவர் தார்விஷ் ரசூலி 155 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் இலங்கை ‘ஏ’ அணி சார்பில் டில்சான் மதுசங்க 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், மொஹமட் சிராஸ் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பின்னர் 249 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ‘ஏ’ அணி 41.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியின் வெற்றி இலக்கினை அடைந்தது.

இலங்கை ‘ஏ’ அணி சார்பாக சதீர சமரவிக்ரம 129 ஓட்டங்களையும், லஹிரு உதார 81 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணி சார்பில் கலீல் அஹ்மட் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை ‘ஏ’ அணியின் சதீர சமரவிக்ரம தெரிவானார்.