எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை எடுத்த அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது,
2025.05.06 ஆம் திகதியன்று நடத்தப்படவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட பெயர் குறித்த நியமனப் பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், அந்த மனுக்கள் மற்றும் வழக்குத் தீர்ப்புக்களின் பிரதிகளை குறித்த மாவட்டத்தின் மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்துக்கு சமர்ப்பிக்குமாறு அந்தந்த அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் அதிகாரம் பெற்ற முகவர்கள் ,சுயேட்சைக் குழுத் தலைவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட சுமார் 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 4 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (11) நீக்கியுள்ளது.
குறித்த 18 உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீள ஏற்றுக்கொள்ளுமாறு அந்தந்த தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு எழுத்தாணை ஒன்றை பிறப்பித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த இடைக்காலத் தடையுத்தரவை நீக்கியுள்ளது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான சகல பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் வாரம் 22,23,24, ஆகிய தினங்களில் தபால்மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது.