தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் தென்மாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவு விழா ஸ்ருற்காட் அரங்கில் 12.04.2025 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணிசெய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும் மாணவர்களையும் 14ஆண்டுகள் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் இவர்கள் அனைவரதும் கூட்டுழைப்பின் விளைவாகத் தமிழாலயங்கள் பெற்ற வெற்றிகளுக்கான மதிப்பளிப்புகள் எனப் பல்வகை மதிப்பளிப்புகளைத் தன்னகத்தே கொண்டதாகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் அகவை நிறைவு விழா அமைந்திருந்தது.
காலை 09:00 மணிக்குத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றிவைத்தமையைத் தொடர்ந்து, சிறப்புவிருந்தினர்கள், மதிப்பளிப்பேற்போர் மற்றும் வாகைசூடியோர்களென அனைவரும் தமிழினத்தின் பண்பாடுதழுவி இளையோரால் வரவேற்கப்பட்டனர்.
அரங்க நிகழ்வுகள், கிறிஸ்த்துவ சனநாயகக் கட்சியின் ஸ்ருற்காட் நகரசபை உறுப்பினரான திரு. கிளவ்ஸ் வெங், ஸ்ருற்காட் சிறீசித்தி விநாயகர் ஆலயப் பிரதமகுரு சிவசிறீ விஸ்வநாத உமாமகேஸ்வர சர்மா, தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், தமிழ் இளையோர் அமைப்பின் துணைப்பொறுப்பாளர் செல்வி வானதி நிர்மலதாசன், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தென்மாநிலப் பொறுப்பாளர் திரு. கனகையா சிறீகாந்தன், தமிழர் கலை பண்பாட்டுக் கழக மூத்த நடன ஆசிரியர்களில் ஒருவரான திருமதி வசுந்தரா சிவசோதி, தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஸ்ருட்காட் கோட்டப் பொறுப்பாளர் திரு. மகாலிங்கம் கோணேஸ்வரன், நூர்ன்பேர்க் கோட்டப் பொறுப்பாளர் திரு. கந்தையா கிட்ணபிள்ளை மற்றும் ஸ்ருட்காட் சிறீசித்தி விநாயகர் ஆலயப் பொறுப்பாளர் திரு. சின்னையா மகேஸ்வரன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி வைக்க, அகவை நிறைவு விழாச் சிறப்புடன் தொடங்கியது.
தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் செம்மையாளன திரு. செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மதிப்பளிப்புகள் தொடங்கின. அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கும் 5,10,15ஆண்டுகள் பணியாற்றிய ஆசான்களுக்கான மதிப்பளிப்புகளோடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு தமிழ் வாரிதி என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு தமிழ் மாணி என்றும்; 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கி மதிப்பளிப்புகள் நடைபெற்றன.
20 ஆண்டுகள் பணியாற்றிய அவுக்ஸ்பூர்க் தமிழாலய ஆசிரியை திருமதி மேரி அஞ்சலா மார்சலீன், முன்சன் தமிழாலய ஆசிரியை திருமதி சறோஜநாயகி அம்மா இரத்தினம், நூர்ன்பேர்க் தமிழாலயத்தின் உதவி நிருவாகியும் ஆசிரியருமான திருமதி கனவாசினி அருமைநாயகம், சின்டெல்பிங்கன் தமிழாலய ஆசிரியை திருமதி டொறின் றொனால்ட், ரூட்லிங்கன் தமிழாலய ஆசிரியை திருமதி அருட்செல்வி தயாபரன், கிர்கைம் ரெக் தமிழாலயத்தின் ஆசிரியர்களான திரு. புண்ணியமூர்த்தி யோகரட்ணம், திருமதி சவுந்திரேஸ்வரி சிறிகாந்தன் ஆகியோருக்கு தமிழ் வாரிதி என்ற பட்டமும் அவுக்ஸ்பூர்க் தமிழாலயத்தின் நிருவாகியான திரு. இராசையா சிவகுமார், முல்லாக்கர் தமிழாலயத்தின் ஆசிரியை திருமதி சகுந்தலை சிவயோகநாதன், பாட்பிறிக்றிக்சால் தமிழாலயத்தின் நிருவாகி திரு. சிவசுப்பிரமணியம் நாகபாலன், ஆசிரியர்களான திரு. கருணாநிதி பூலிங்கம், திருமதி அருளேஸ்வரி ஆனந்தகுமார், சின்டெல்பிங்கன் தமிழாலயத்தின்; ஆசிரியர்களான திருமதி ஜீவராணி செல்வராசா, திருமதி நந்தினி தர்மரெட்ணம், கிர்கைம் ரெக் தமிழாலயத்தின் உதவிநிருவாகியும் ஆசிரியையுமான திருமதி சித்திரா சுதேஸ்வரன் ஆகியோருக்கு தமிழ் மாணி என்ற சிறப்புப் பட்டமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
அனைத்துலகப் பொதுத்தேர்வில் நாடுதழுவிய மட்டத்தில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான மதிப்பளிப்பும், கலைத்திறன் போட்டியில் மாநிலமட்டத்தில் 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளைப்பெற்ற முன்சன், ஸ்ருட்காட் மற்றும் நூர்ன்பேர்க் தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்பும் வழங்கப்பட்டது. தமிழ்த்திறன் போட்டியில் நாடுதழுவிய மட்டத்தில் முதலாம் நிலையைப் பெற்றமைக்காக தமிழாலயம் முன்சனுக்கு மதிப்பளிக்கப்பட்டதோடு, சிறப்பு மதிப்பளிப்பாகக் கடந்து பத்து ஆண்டுகளாக வழங்கப்பட்டுவரும் மாமனிதர் இரா. நாகலிங்கம் விருது தமிழாலயம் முன்சனால் 2024ஆம் ஆண்டு தமிழ்த்திறனுக்காகக் கையேற்கப்பட்டுள்ளது. இந்த விருதானது தொடர்ந்து மூன்றுமுறை முதலாம் இடத்தைப்பெறும் தமிழாலயத்துக்கு வழங்கப்பட்டுவருகிறது.
மழலையராக இணைந்து 14 ஆண்டுகள் தமிழ்மொழிக் கற்றலில் சித்திபெற்று நிறைவுசெய்த 64 மாணவர்கள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் அழைத்துவரப்பட்டுக் கல்வி மற்றும் தமிழ்த்திறன்பிரிவுப் பொறுப்பாளர் தமிழ்த்திறனாளன் திரு. இராஜ. மனோகரன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது வாழ்த்துரையும் தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளரின் பிரியாவிடை உரையும் இடம்பெற்றன.
மாணவர்களின் உரை, எழுச்சிப்பாடல்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகளுமாக நடைபெற்ற அகவை நிறைவுவிழா, தமிழ்த் தேசத்தின் விடியலுக்கான நம்பிக்கையைப் பறைசாற்றியவாறு, தமிழ்க் கல்விக் கழகத்தின் 35ஆவது அகவை நிறைவுவிழா 20:30 மணிக்குத் தென்மாநிலத் தமிழாலயங்களின் அகவை நிறைவுவிழாவோடு சிறப்புடன் நிறைவுற்றது.