1988 -1989 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு மக்கள் விடுதலை முன்னணி ஆயுதங்களை கொள்ளையடித்தது. இதனை பொறுப்பில் உள்ள அரசாங்கம் எவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. அதற்கான நடவடிக்கைகளையே அப்போதைய அரசாங்கம் மேற்கொண்டிருந்ததென ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) நடைபெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பட்டலந்த முகாம் கம்பஹா மாவட்டத்தில் காணப்பட்டது. அக்காலப்பகுதியில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன. மக்கள் விடுதலை முன்னணி கட்டவிழ்த்து விட்டு வன்முறைகளை அடக்குவதற்காகவே பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன.
பல ஆண்டுகாலமாக மறைக்கப்பட்டிருந்த பட்டலந்த விவகாரத்தை அல்ஜசீரா ஊடகம் கேள்விக்குள்ளாக்கியதன் பின்னரே இந்த விடயம் குறித்து தற்போது பேசப்படுகிறது. 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவுக்கு எதிரான செயற்பாடு மற்றும் இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அக்காலப்பகுதியில் வன்முறைகள் தோற்றம் பெற்றன.
மக்கள் விடுதலை முன்னணியுடன் ஒன்றிணைந்து அரசியல் செய்த முன்னிலை சோசலிசக் கட்சி பாரதப் பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவுக்கு வந்த போது வீதியில் இருந்து போராட்டம் செய்தது. இந்த போராட்டத்தை இந்த அரசாங்கம் நிறுத்தியது.
இதுபோலதான் 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவின் அப்போதைய பிரதமர் ரஜீவ் காந்தி இலங்கைக்கு வந்த போது மக்கள் விடுதலை முன்னணி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுட்டது. அரசாங்கம் இந்த போராட்டத்தை முடக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது.இதனை தவறென்று எவ்வாறு குறிப்பிடுவது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் இலங்கைக்கு வந்த போது முன்னிலை சோசலிசக் கட்சி பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. ஆனால் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு வந்த போது மக்கள் விடுதலை முன்னணி ஆயுதமேந்தி போராடியது, குண்டுத்தாக்குதல்களை நடத்தியது. மக்கள் விடுதலை முன்னணி ஆயுதமேந்திய காரணத்தால் சகல விளைவுகளும் ஏற்பட்டன.
பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு மக்கள் விடுதலை முன்னணி ஆயுதங்களை கொள்ளையடித்தது. இதனை பொறுப்பில் உள்ள அரசாங்கம் எவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. அதற்கான நடவடிக்கைகளையே அப்போதைய அரசாங்கம் மேற்கொண்டிருந்தது என்றார்.

