அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரி விதிப்பால், பெருந்தோட்டங்களில் எவ்வாறான பாதிப்புகள் ஏற்படும் என்பது தொடர்பில், சர்வ கட்சி கூட்டத்தில் எடுத்துரைப்பேன் என ஐ.தே.க பாராளுமன்ற குழு தலைவரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் வியாழக்கிழமை (10) காலை 11 மணியளவில் இடம்பெறவுள்ள சர்வகட்சிமாநாட்டில், அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ளபுதிய வரி விதிப்பு தொடர்பாகவிரிவாக கலந்துரையாடப்படவுள்ளது. அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள புதிய வரி தொடர்பாக பேச்சு நடத்துவதற்காக சர்வ கட்சி மாநாட்டை கூட்டுமாறு எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி இருந்த நிலையில் இந்த சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இதில் முக்கியமாக இலங்கை மீது அமெரிக்கா விதித்துள்ள வரி தொடர்பாக பெருந்தோட்ட பகுதிகளுக்கு எவ்வாறான தாக்கங்களை செலுத்தும் என்பது தொடர்பில் பார்த்தோமானால்,தேயிலை, இறப்பர், இலவங்கப்பட்டை, ஆடை உற்பத்தி போன்ற துறைகளில் தாக்கத்தை செலுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிரதானமாக அமெரிக்கா மற்றும் இலங்கைக்கான தேயிலை,இறப்பர், இலவங்கப்பட்டை, ஆடை ஆகிய பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்புக்கு உள்ளாகுமேயானால் தொழிற்துறையும் பாதிப்புக்குள்ளாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பாக அமெரிக்கா சந்தைகளில் இறக்குமதி செய்யப்படும் தேயிலை, இறப்பர், இலவங்கப்பட்டை, ஆடை உற்பத்தி பொருட்களுக்கான அதிகப்படியான வரியினை செலுத்தி பொருட்கள் இறக்குமதி செய்வதனை இறக்குமதி நிறுவனங்கள் தாமதம் காண்பிப்பதால் தேயிலை, இறப்பர், இலவங்கப்பட்டை,ஆடை ஆகிய உற்பத்தி பொருட்களுக்கான ஏற்றுமதி இலங்கையில் குறைவடையும் இதனால் மேற்குறித்த பொருள் உற்பத்தி நிறுவனங்களின் தொழில் வாய்ப்புகளும் குறைவடையும் சாத்தியம் அதிகரிக்கும் என்பதால் இது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட உள்ளது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்

