தனியார்துறை வர்த்தக நடவடிக்கைகளில் நேர்மைத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பன பற்றிய புரிதலை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை இணைந்து முன்னெடுக்கும் நோக்கிலான இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா மற்றும் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (இன்டர்நெஷனல் சேம்பர் ஒஃப் கொமர்ஸ் ஸ்ரீலங்கா) என்பன கைச்சாத்திட்டுள்ளன.
நாட்டின் வர்த்தகத்துறையின் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம், தனியார்துறை மற்றும் சிவில் சமூகம் என்பன கூட்டாக கைகோர்க்கும் ஒரு முயற்சியாக இது அமைந்துள்ளது.
மேற்குறிப்பிட்ட பண்புகளுடன் கூடிய கலாசாரத்தை கட்டியெழுப்பும் வகையிலான பொது இலக்கினை உருவாக்குவதும், அதனை முன்னிறுத்தி தரவு அடிப்படையிலான உத்திகளைக் கட்டியெழுப்புவதுமே இதன் பிரதான நோக்கமாகும்.
இக்கூட்டுமுயற்சியின் ஊடாக சம்பந்தப்பட்ட தரப்பினரின் வகிபாகம், பொறுப்புக்கள் மற்றும் ஒத்துழைப்புடன் பணியாற்றக்கூடிய வழிமுறைகள் என்பன தெளிவாக வரையறுக்கப்படும்.
அதுமாத்திரமன்றி ஊழல் ஒழிப்பு, பின்பற்றப்படவேண்டிய ஒழுங்குமுறைகள், சுயாதீன கணக்காய்வு உள்ளடங்கலாக செயற்றிறன் மிக்க உள்ளகப்பொறிமுறையை நிறுவுதல் என்பவற்றை இலக்காகக் கொண்டு தனியார்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கு இவ்விருதரப்பு ஒப்பந்தத்தின் ஊடாக அரசாங்கத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும்.
அத்தோடு நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் அவற்றின் மீதான கண்காணிப்பு என்பவற்றை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அரச கட்டமைப்புக்கள், வணிகங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுக்கு இடையிலான தரவுப் பரிமாற்றத்தையும் இந்த ஒப்பந்தம் ஊக்குவிக்கிறது. இதனூடாக இலங்கையில் துடிப்பானதும், பொறுப்புக்கூறத்தக்கதுமான தனியார்துறையைக் கட்டியெழுப்ப முடியும் எனவும், அதன் மூலம் நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை அடைந்துகொள்ளமுடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

