இந்திய வீடமைப்புத் திட்டம், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்துக்கான விசேட உதவி திட்டங்கள் போன்ற இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்தியாவின் அபிவிருத்தி உதவி திட்டங்கள் குறித்து இருதரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்றது. இதன் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது மலையக மக்களுக்காக வழங்கப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டத்தையும், மலையக பாடசாலைகளுக்கான நவீன வகுப்பறைகள் வழங்கும் செயற்றிட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் வினைத்திறன் குறித்து மகிழ்ச்சியடைவதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
மலையக சமூகத்தினருக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 10,000 வீடுகளின் முன்னேற்றம் மற்றும் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகளின் செயற்பாடுகள் தொடர்பாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கைக்கான விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளதாக உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்துள்ளார்.

