பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் – ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்

78 0

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை இலங்கைக்கு வேண்டுமானால் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்திருக்கிற நிபந்தனைகளை இலங்கை பின்பற்றியாக வேண்டும். இணக்கப்பாடுகளை நிறைவேற்றியாக வேண்டும். இல்லாவிடின்,  ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை இலங்கைக்கு கிடைக்காமல் போய்விடும் என்று இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரினோ தெரிவித்தார்.

மேலும், ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை இலங்கையே ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்கிறது. எனவே, அந்த சலுகையை கேட்டால் அதற்கேற்றவாறு இலங்கை நடந்துகொள்ள வேண்டும். எங்களது நிபந்தனைகளை தளர்த்துமாறு இலங்கை எமக்கு கூற முடியாது. அதேபோன்று ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கியிருக்கின்ற சலுகையை இலங்கை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதனை முழுமையாக பயன்படுத்தினால் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதியை இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

பாத்பைன்டர் நிறுவனத்தினால் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுவருடனான வட்டமேசை கலந்துரையாடலிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

இலங்கைக்கு  ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை அடுத்த வருடம் இறுதியுடன் நிறைவடைகிறது. மீண்டும் அதனை பெற்றுக்கொள்ள இலங்கை அதற்கு மீள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியம் 2027ஆம் ஆண்டிலிருந்து புதிய நிபந்தனைகளையும் விதிக்கவிருக்கிறது.

சில தினங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழு இலங்கைக்கு விஜயம் செய்து  27 நிபந்தனைகள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன என்பது தொடர்பாக ஆராய்ந்து பார்க்கவிருக்கிறது. அந்த   கண்காணிப்பின் பின்னரேயே இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை மீண்டும் வழங்குவதா, இல்லையா என்பது தீர்மானிக்கப்படவிருக்கிறது.

அமெரிக்கா இலங்கைக்கு 44 வீத தீர்வையை விதித்திருக்கின்ற நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையும் முடிவுக்கு வருமானால் இலங்கையை பாரிய நெருக்கடியை சந்திக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பின்னணியிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

“அரசாங்கம் உரையாடலைத் தொடங்க வேண்டும், தகவல்களை வழங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இன்னும் எதையும் செய்யவில்லை என்றால், ஏன்? என்ன தடைகள் உள்ளன என்பதனை கூறுங்கள். அதைச் செய்வதற்கான வழிமுறை என்ன? இந்த வகையான ஈடுபாட்டைத்தான் கேட்கிறோம்.   அனைத்து விடயங்களும் இன்று தீர்க்கப்பட வேண்டும் என்று நாம் கூறவில்லை. நிபந்தனைகள் சர்வதேச மரபுகளுக்கு இணங்கும் வகையில் உள்ளன. இப்போது 27 நிபந்தனைகள் உள்ளன.  இன்னும் பல உள்ளீர்க்கப்படும்” என்று   ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் குறிப்பிட்டார்.

இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கிட்டத்தட்ட 2.5 பில்லியன் டொலர்களுக்கு ஏற்றுமதி செய்கிறது. அதிகளவில் ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் ஜி.எஸ்.பி வரிச் சலுகையினால் இலங்கை 66 வீத நிவாரணத்தை இலங்கை பெறுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் 27 நாடுகளைக் கொண்ட 450 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஒற்றை சந்தையாக காணப்படுகிறது. இந்த 27 நாடுகளுக்கும் ஓர் எல்லையின் ஊடாக பிரவேசிக்க முடியும்.

“ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கியிருக்கின்ற ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இலங்கை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதனை முழுமையாக பயன்படுத்தினால் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதியை இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும். இலங்கை தற்போது பிரான்ஸ், ஜேர்மன், ஸ்பெய்ன், பெல்ஜியம் போன்ற சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. 27 நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். 27 நாடுகளும் ஒரு சந்தையாகும்’’ என்றும் தூதுவர் குறிப்பிட்டார்.

மேலும், இம்மாதம் 20ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழு இலங்கைக்கு விஜயம் செய்யும். அந்த குழு இலங்கையில் இருந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதன் பின்னர் இலங்கை 2026ஆம் ஆண்டில் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகைக்காக மீள் விண்ணப்பிக்க வேண்டும். புதிய விதிமுறைகளும் அதில் உள்ளடக்கப்படும். இது நாங்கள் வழங்குகின்ற ஒரு சலுகையாகும்.  எனவே, அந்த சலுகையை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், அதன் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும். எமது நிபந்தனைகளை தளர்த்துமாறு யாரும் கூற முடியாது.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில்  நிபந்தனைகளை தளர்த்துமாறு உங்களால் கூற முடியுமா? முடியாது. அதேபோன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளையும் தளர்த்துமாறு கூற முடியாது. உங்களுக்கு இந்த சலுகை வேண்டுமானால், நீங்கள் அதனை நிறைவேற்றியாக வேண்டும். நாங்கள் அரசாங்கத்துக்கு கூறுவது என்னவென்றால், தயவுசெய்து எங்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு உங்களது விடயங்களை முன்வையுங்கள் என்பதாகும். முக்கியமாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால், அரசாங்கம் அதனை நீக்கவில்லை. அந்த சட்டம் இன்னும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பதிலாக கடந்த அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட புதிய சட்டமும் மிக மோசமானதாக இருக்கிறது. எந்த சட்டமும் சர்வதேச சட்டங்களை மரபுகளை   பின்பற்றுவதாக அமைய வேண்டும் என்றும்  ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் குறிப்பிட்டார்.