டிஐஜி தொடர்ந்த அவதூறு வழக்கில், திருச்சி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஆஜரானார். திருச்சி ஜூடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (எண்.4) திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் சீமான் ஆஜராகாமல் இருந்தார். நேற்று முன்தினம் நடைபெற்றவழக்கு விசாரணையின்போதும் சீமான் ஆஜராகாததால், ஏப்.8-ம் தேதி நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி விஜயா உத்தரவிட்டார்.
அதன்படி, திருச்சி ஜே.எம். 4 நீதிமன்றத்தில் நேற்று சீமான் ஆஜரானார். அப்போது, நீதிபதி உத்தரவின்பேரில், டிஐஜி வருண்குமார் தரப்பில் தாக்கல் செய்த வழக்கு குறித்த ஆவண நகல்கள் சீமான் தரப்புக்கு வழங்கப்பட்டன. தொடர்ந்து, ஏப். 29-ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கு போலவே, 2 ரவுடிகளை என்கவுன்ட்டர் செய்து, அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கையும் முடிவுக்கு கொண்டுவர போலீஸார் திட்டமிட்டுள்ளனர். உண்மையான குற்றவாளிகளை கண்டறியாமல், வழக்கை முடிப்பதிலேயே காவல் துறை முனைப்பு காட்டுகிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

