தனது அதிகாரத்தை அமெரிக்கா துஷ்பிரயோகம் செய்கிறது

116 0

அமெரிக்கா மீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அமெரிக்கா தவறு மேல் தவறு செய்வதாகவும் இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை. இறுதிவரை போராடுவோம் என்றும் சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றட்ரம்ப் அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2-ம் தேதி  ட்ரம்ப் அறிவித்தார்.

அதன்படி சீனாவுக்கு 34 சதவீதம்இ வங்கதேசம் 37 சதவீதம் வியட்நாம் 46 சதவீதம் ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம் ஜப்பான் 24 சதவீதம் இந்தோனேசியா 32 சதவீதம் பாகிஸ்தான் 29 சதவீதம் தாய்லாந்து 36 சதவீதம் என வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

10 சதவீத அடிப்படை வரி விதிப்பு ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்தும் கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்தன. ஏப்ரல் 10-ம் தேதி முதல் அனைத்து அமெரிக்க பொருட்களுக்கும் 34மூ இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்தது. அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கான சீனாவின் பதிலடியாக இது அமைந்தது.

இதனையடுத்து அமெரிக்கா மீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று  ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “சீனா ஏற்கனவே நிர்ணயித்துள்ள சட்டவிரோத வரிகளுடன் கூடுதலாக 34 வீதபழிவாங்கும் வரிகளை விதித்தது. ஏப்ரல் 8-ம் தேதிக்குள் சீனா தனது 34வீத வரி அதிகரிப்பை திரும்பப் பெறவில்லை என்றால் மறுநாள் அதாவது ஏப்ரல் 9-ம் தேதி முதல் சீனா மீது 50 வீதகூடுதல் வரிகளை அமெரிக்கா விதிக்கும். கூடுதலாக சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும். பிற நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் உடனடியாக நடைபெறும்” என்று எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் தான் சீன அரசு இதழான க்ளோபல் டைம்ஸ் இதழில் வெளியான அறிக்கையில் “பரஸ்பர வரி என்ற பெயரில் அமெரிக்கா உலக நாடுகளுக்கு பொருளாதார மிரட்டல் விடுத்துள்ளது. தனது அதிகாரத்தை அமெரிக்கா துஷ்பிரயோகம் செய்கிறது.

அமெரிக்காவின் நடவடிக்கைகள் சர்வதேச பொருளாதார விதிமுறைகளுக்கு எதிரானது. இது உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மையை சேதப்படுத்தும். சீனா நியாயத்தையும் தனது இறையான்மையையும் பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளது. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு சீனா அடிபணியாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சீனா மீது அமெரிக்கா விதித்த ‘பரஸ்பர வரிகள்’ என்று அழைக்கப்படுவது முற்றிலும் ஆதாரமற்றது ஒருதலைப்பட்சமான கொடுமைப்படுத்தல் நடைமுறையாகும்.” என்று சீன வர்த்தக அமைச்சகம் கடுமையாக விமர்சித்துள்ளது.