2010 – 2011 காலப்பகுதியில் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட குடிநீர் திட்டத்தின் போது சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்காக வழங்கப்பட்ட பதில் காணிகள் காட்டுப்பகுதியை அண்மித்துள்ளதாக உள்ளது. அந்த மக்கள் காட்டு யானைத் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அலுவல்கள் அமைச்சிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் வவுனியா நகரில் 2010 – 2011 இல் குடிநீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது வயல் நிலங்கள்,வீடுகள், வழிபாட்டிடங்கள் சுவீகரிக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 13 வருடங்கள் முடிவடைந்துவிட்டன. இத்தனை வருடங்களாக உறுதிக்காணிகளை வழங்கியவர்கள் தற்காலிக அனுமதிப்பத்திரத்துடன் உள்ளனர்.
இந்த திட்டத்திற்காக கையளிக்கப்பட்ட காணிகள் யானைகள் இல்லாத காணிகளாக இருந்த நிலையில், இதற்கு பதிலாக வழங்கப்பட்டுள்ள காணிகள் நடுகாட்டில் இருக்கும் நான்கு பக்கங்களில் இருந்தும் யானைகள் வந்து அழிவை ஏற்படுத்தக் கூடிய நிலைமை உள்ளது. ஆகவே இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
அங்கே மூன்று குளங்கள் இணைக்கப்பட்டுள்ள போதும் வயல்கள் குளத்தை விடவும் உயர்ந்த இடத்தில் இருப்பதால் விவசாயம் செய்ய முடியாமல் உள்ளன.
அத்துடன் 3 கிலோ மீற்றர் வீதியும் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. வடக்கு மாகாண வீதி அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் ஒரு பகுதியை இதற்காக பயன்படுத்தி அந்த வீதியை மக்கள் பயணிக்கக்கூடிய வீதியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு எழுந்து பதிலளித்த வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அருண கருணாதிலக,
இந்த விவசாயிகளுக்காக தற்காலிகமான அனுமதிப்பத்திரங்களே வழங்கப்பட்டுள்ளன என்பதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன். உரித்துகளை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்று நினைக்கின்றோம்.
வீதி தொடர்பான பிரச்சினையை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கின்றேன். அத்துடன் காட்டு யானைகள் தொடர்பான பிரச்சினையும் நான் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.