புதிய தீர்வை வரி குறித்து ஏப்ரல் 9 க்கு முன்னர் அமெரிக்காவுடன் பேச்சு – பிரதி அமைச்சர் அனில் பெர்னாண்டோ

81 0

அமெரிக்காவின் தீர்வை வரி தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். ஏப்ரல் 9 ஆம் திகதிக்கு பின்னர் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர் பேச்சுவார்த்தையின் ஊடாக  தீர்வை வரி வீதத்தை குறைத்துக் கொள்வது தொடர்பில் கோரிக்கை முன்வைக்க முயற்சித்துள்ளோமென  தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி  பிரதி அமைச்சருமான அனில் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கைக்கு விதித்துள்ள புதிய தீர்வை வரி மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையை மாத்திரம் இலக்காகக் கொண்டு அமெரிக்கா தீர்வை வரியை விதிக்கவில்லை. அமெரிக்காவுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் சகல நாடுகளுக்கும் இந்த தீர்வை வரி விதிக்கப்பட்டுள்ளது.பொதுவான கொள்கை அடிப்படையில் அமெரிக்கா இந்த வரி விதிப்பை அமுல்படுத்தியுள்ளது.

அமெரிக்கா வர்த்தக பற்றாக்குறையை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. பூகம்பத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மியன்மாருக்கும் தீர்வை வரி விதிக்கப்பட்டுள்ளது.  வரி விவகாரம் தொடர்பில் அரசாங்கம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை,தலையிடவில்லை என்று சமூக வலைத்தளங்களில் குறிப்பிடுவது முற்றிலும் தவறானதொரு கருத்தாகும்.

அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

ஏப்ரல் 9 ஆம் திகதிக்கு பின்னர் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர் பேச்சுவார்த்தையின் ஊடாக  தீர்வை வரி வீதத்தை குறைத்துக் கொள்வது தொடர்பில் கோரிக்கை முன்வைக்க முயற்சித்துள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்ட ஒப்பந்தங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மத்தியில்  இலங்கை சகல நாடுகளின் ஒத்துழைப்புடன் செயற்படுகிறது. ஆகவே இலங்கையின் பொருளாதார நிலைமையை குறித்து முன்னிலைப்படுத்திய விடயங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும்.

அமெரிக்காவின் புதிய கொள்கையுடன் தான் எமது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த முடியும். பிறிதொரு நாட்டின் கொள்கை அமுலாக்க விவகாரத்தில் நாடு என்ற ரீதியில் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. ஆடை உற்பத்தி, உணவு உற்பத்தி உள்ளிட்ட துறைகளின்   ஏற்றுமதிகளுக்கு கணிசமான அளவில் பாதிப்பு  ஏற்படும்.

இதனால் இலங்கையின் உற்பத்திக்கான கேள்விகள் குறைவடைந்து உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படலாம்.இவ்விடயம் குறித்து தீவிர கவனம் செலுத்தியுள்ளோம்.

அமெரிக்கா தனது தீர்மானத்தில் மாற்றம் ஏற்படுத்தாவிடின் மாற்று வழிமுறைகள் பல உள்ளன.ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் ஊடாக விசேட சலுகைகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம்.எமது தீர்வை வரி கொள்கையை இலகுப்படுத்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம் என்றார்.