அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும் விரைவில் வழக்கு தாக்கல்

26 0
வழக்குத் தாக்கல் செய்வதில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவுக்கு தெரிவுகள் ஏதும் கிடையாது.  ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடுவதில்லை. தற்போதைய  அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும் வெகுவிரைவில் வழக்குத் தாக்கல் செய்யப்படும். என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாரத்துக்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வுநிலை) அபேவிக்ரம திசாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் விமர்சனங்களை முன்வைப்பதற்கு முன்னர் ஆளும் மற்றும் எதிர்தரப்பினர் 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தை வாசித்து விளங்கிக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்.

ஆணைக்குழுவின் சுயாதீனத்தை மலினப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாரத்துக்களைப் புலனாய்வு  செய்வதற்கான ஆணைக்குழுவில் வியாழக்கிழமை (02)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான ஆணைக்குழுவின் செயற்பாடுகள், சட்ட நிலைமை தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.ஊழலுக்கு எதிராக தேசிய மட்டத்திலான செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவே 2025-2029 வரையான காலப்பகுதிக்கான கருத்திட்டம் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராகவே கடந்த ஆண்டு காலப்பகுதியில் நாட்டு மக்கள் கடுமையாக குரல் கொடுத்தார்கள். ஊழல் மற்றும் இலஞ்சத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் செய்தியை நடைபெற்று முடிந்த  தேர்தல்களில் வெளிப்படுத்தினார்கள். இந்த செய்தி அரசியல்வாதிகளுக்கும், அரசாங்கத்துக்கும் மாத்திரம் வரையறுத்ததல்ல, ஆணைக்குழுவுக்கும் பொறுப்பானதாகும்.

2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம் மற்றும் அந்த சட்டத்தின் பிரகாரம் ஆக்கப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாரத்துக்களைப் புலனாய்வு  செய்வதற்கான ஆணைக்குழு தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியிலும், சட்டத்தரணிகள் மத்தியிலும் குறிப்பாக அரசியல்வாதிகளுக்கும் போதுமான தெளிவு இல்லை என்பதை அண்மைகாலமாக குறிப்பிடப்படும் கருத்துக்கள் ஊடாக விளங்கிக்கொள்ள முடிகிறது.

1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய  ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.இந்த ஆணைக்குழு சட்டத்துக்கும், 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்துக்கும் இடையில் பரஸ்பரமான பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. 1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க சட்டத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வழக்குத் தாக்கல் செய்வதற்கு மாத்திரம் அதிகாரமளிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும்   2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் வழக்குத் தாக்கலுக்கு அப்பாற்பட்டு விரிவான அதிகாரமளிக்கப்பட்ட பொறுப்புக்கள் உரித்தாக்கப்பட்டுள்ளன. இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு தேசிய கொள்கைத் திட்டத்தை தயாரிப்பதற்கு தலையீடு செய்யும் அதிகாரம் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச சமவாயங்கள், ஐக்கிய நாடுகள் சபையில் ஊழல் எதிர்ப்பு கோட்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களை காட்டிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய ஆணைக்குழுவுக்கு ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் ஊடாக சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. குறைப்பாடு யாதெனில் நாட்டு மக்கள் சட்டத்தின் உள்ளடக்கத்தை தெரிந்துக்கொள்வதில்லை. குறிப்பாக சட்டத்தை இயற்றிய அரசியல்வாதிகள் சட்டத்தின் விதிமுறைகளை தெளிவாக வாசித்து விளங்கிக்கொள்வதில்லை.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து அண்மைக்காலமாக ஊடகங்கள் மத்தியில் கருத்துக்களை குறிப்பிடும் அரசியல்வாதிகள் தாம் இயற்றிய ஊழல் எதிர்ப்பு சட்டம் தொடர்பில் மீளாய்வு செய்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுக்கொள்கிறேன். ஊழல் மோசடி தொடர்பில் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய செயற்படும் போது அரசியல் பழிவாங்கல்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

அரசியல் பழிவாங்கல்கள் என்பதற்கு ஆணைக்குழுவை பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். சுயாதீன ஆணைக்குழுவை அவமதிக்கும் வகையில் அவரேனும் அரசியல் நோக்கத்துடன் கருத்துக்களை வெளியிட்டால் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 118 ஆவது உறுப்புரிரையின் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நேரிடும். ஆகவே விமர்சனங்களை முன்வைப்பதற்கு முன்னர் சட்டத்தின் உள்ளடக்கத்தை தெளிவாக வாசித்து விளங்கிக்கொள்ளுமாறு தயவுடன்  வலியுறுத்துகிறேன்.

வரையறுக்கப்பட்டுள்ள மனித மற்றும் பௌதீக வளங்களுக்கு அமைவாகவே செயற்பட வேண்டியுள்ளது. ஆணைக்குழுவின் வசம் 4000 முறைப்பாடு கோப்புக்கள் நிலுவையில் உள்ளன. எதிர்வரும் காலப்பகுதியில் நிலுவையில் உள்ள முறைப்பாட்டு விசாரணைகளை நிறைவுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

வழக்குத் தாக்கல் செய்வதில் ஆணைக்குழுவுக்கு தெரிவுகள் ஏதும் கிடையாது.  விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் சாட்சியத்துடன் தான் வழக்குத் தாக்கல் செய்யப்படுகிறது.

ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடுவதில்லை.எமக்கு தெரிவுகள் ஏதும் கிடையாது. இந்த அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும் வெகுவிரைவில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றார்.