மாதாந்த விலை சூத்திரத்துக்கு அமைய பெற்றோலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டிருந்தாலும் சேவை கட்டணங்களை குறைக்க முடியாது என பேருந்து, முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை ஆகியவற்றின் சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
வருடாந்த கட்டண திருத்தத்துக்கு அமைய எதிர்வரும் ஜூன் மாதம் பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க நேரிடும். டீசல் விலையை குறைக்காமல் கட்டண குறைப்பை எதிர்பார்க்க முடியாது என்று அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மாதாந்த விலைச்சூத்திரத்துக்கு அமைய திங்கட்கிழமை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டது. இருப்பினும் டீசல், மண்ணெண்ணெய் ஆகிய எரிபொருள் பொருட்களின் விலை திருத்தம் செய்யப்படவில்லை.
எரிபொருள் விலை தொடர்பில் பொதுமக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். சாதாரண மக்கள் பயன்படுத்தும் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படவில்லை. சமையல் எரிவாயுவின் விலையை 420 ரூபாவால் அதிகரித்து விட்ட எரிபொருளின் விலையை 10 ரூபாவால் குறைப்பது எந்தளவுக்கு நியாயமானது. ஆகவே இந்த விலைக்குறைப்பு எவ்விதத்திலும் பயனடையாது என்று பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.
அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்
பெற்றோல் விலையை 10 ரூபாவால் குறைத்துள்ளதால் முச்சக்கர வண்டி சேவை கட்டணத்தை குறைக்க முடியாது. மாதாந்தம் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்துவதால் கட்டணத்தை நிலையான தன்மையில் பேண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார்.
பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கம்
மாதாந்த எரிபொருள் விலைக்குறைப்பில் டீசலின் விலை குறைவடையும் என்று எதிர்பார்த்தோம்.ஆனால் இம்முறையும் விலை குறைவடையவில்லை. எரிபொருள் கட்டணம் அதிகரிக்கப்படும் போது சேவை கட்டணத்தையும் அதிகரிக்க முடியாது ஏனெனில் நடுத்தர மக்கள் இன்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எரிபொருள் விலையேற்றத்தால் இந்த தொழிற்றுறையில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் ருவான் பிரசாத் தெரிவித்தார்.
அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்
தனியார் பேருந்து சேவைக்கு சாதகமான வகையில் டீசலின் விலை குறைவடையவில்லை. கடந்த ஓரிரு மாதங்களாக டீசலின் விலை அதிகரித்த போது பேரூந்து கட்டணத்தை அதிகரிக்கவில்லை. எதிர்வரும் ஜூன் மாதம் வருடாந்த கட்டண திருத்தம் இடம்பெறவுள்ளது. இதன்போது பேருந்து கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என்பதை போக்குவரத்து அமைச்சுக்கு தெரிவித்துள்ளோம் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.