யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற நால்வருக்கு விளக்கமறியல்

107 0

கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியே கடந்த  21 ஆம் திகதி இரவு ஏற்பட்ட மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்குக் கடந்த வெள்ளிக்கிழமை (21) இரவு யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவியுடன் குழுவொன்று சென்றுள்ளது.

இதன்போது, இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற குழுவுக்கும் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதலின் போது யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற குழுவினர் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொம்பனி வீதி பொலிஸாரிடம் 3 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.

இந்த மோதலுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் மத்திய கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் கடந்த புதன்கிழமை (26) சரணடைந்ததையடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.