கிளிநொச்சி புழுதியாறு குளத்தின் செயலிழந்துள்ள ஏற்று நீர்ப்பாசன அபிவிருத்தி வேலைகளை எந்த ஒரு அரசியல் தலையீடுகளும் இன்றி சரியான முறையில் வடமாகாண ஆளுனர் மேற்கொள்ளப்பட வேண்டுமென குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் மாயவனூர் கிராமத்தில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும் வடக்கு மாகாண சபையால் கடந்த 2017 ஆம் ஆண்டு சுமார் மூன்று கோடியே இருபது இலட்சம் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஏற்று நீர் பாசன திட்டம் உரிய முறையில் முன்னெடுக்கப்படாத நிலையில் மக்களுக்கு பயனற்ற ஒரு திட்டமாகவே கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக காணப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த ஏற்று நீர்ப்பாசன திட்டத்தின் குறைபாடுகள் தொடர்பிலும் அதனை மீள நடைமுறைப்படுத்துவதற்கு உரிய தரப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை குறித்த பிரதேச விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.
அண்மையில் இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் குறித்த இடத்தை சென்று நேரடியாக பார்வையிட்டு பிரதேச மக்கள் மற்றும் மாவட்ட அரச அதிபர் ஆகியோருடனும் கலந்துரையாடியிருந்தார்.
முன்னதாக கடந்த காலங்களில் குறித்த குளத்தின் அபிவிருத்தி வேலைகள் அரசியல் தலையீடுகளால் அபிவிருத்தி பணிகளில் குளறுபடிகள் இடம் பெற்றன.
ஆகவே எதிர்காலத்தில் எந்தவித அரசியல் தலையீடுகளும் இன்றி அதன் பணிகளை முன்னெடுக்குமாறு கூறியுள்ளனர்.
சிலர் வருகை தந்து குளத்தை அபிவிருத்தி செய்து தருவதாகவும் ஏற்று நீர்ப்பாசன திட்டத்தை ஏற்படுத்தி தருவதாகவும் போலியான வாக்குறுதிகளை வழங்கி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ்வாறு தங்களை கடந்த காலங்களில் சிலர் தமது அரசியல் இலாபத்திற்காக ஏமாற்றியது போன்று இம்முறையும் ஏமாற்றுவதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும் பின்தங்கிய தங்களுடைய கிராமத்தை பின்தங்கிய நிலையிலே வைத்திருப்பதற்கு சிலர் முயற்சி செய்து வருவதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

