கடந்த சில மாதங்களாக நாடளாவிய ரீதியில் அடையாங்காணப்படும் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
நோய் பரவல் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கடந்த சில மாதங்களாக நாடளாவிய ரீதியில் அடையாளங்காணப்படும் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளமையை காணக் கூடியதாக உள்ளது. கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதி மற்றும் கொழும்பு கோட்டை ஆகிய பகுதிகளிலேயே சிக்குன்குனியா நோயால் பாதிப்புக்குள்ளாகிய நோயாளர்கள் அதிகளவில் பதிவாகுகின்றனர்.
நுளம்புகளின் மூலம் இவை மனிதர்களுக்கு பரவுகிறது. நோய் தொற்றுக்கு ஆளான ஒருவரிடம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு கடுமையான காய்ச்சல் நிலவக்கூடும்.
அத்தோடு தோலில் சிவப்பு நிற கொப்புளங்கள், சிவப்பு நிற தழும்புகள், மூக்கு, கை, கால்கள் கரு நிறத்தில் காணப்படல் போன்ற அறிகுறிகள் தென்பட கூடும். டெங்கு காய்ச்சலை ஒத்த அறிகுறிகளையும் காணலாம். இதுவொன்றும் பறவை காய்ச்சல் அல்ல.
ஒரு வகை வைரஸால் பரவும் நோயாகும். டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர் ஒரு சில தினங்களில் குணமடைந்து விடுவார். எனினும் சிக்குன்குனியா ஏற்பட்ட ஒருவர் மூட்டு வலி பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். இது மாதம் அல்லது வருடகணக்கில் தொடர வாய்ப்புள்ளது. ஆகையால் மழை காலங்களின் போது அனைவரும் அவதானத்துடன் செயற்படுவது நல்லது.
நுளம்புகள் பெருக்கக் கூடிய இடங்களை இல்லாதொழித்து சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்திருப்பது அவசியம். நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள். நீரிழப்பைத் தடுப்பதற்கு போதியளவான நீர் மற்றும் நீராகாரங்களை பருகலாம் என்றார்.

