யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும் வழியில் பயன்படுத்த வேண்டும் – சத்தியலிங்கம்

19 0

பல கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட  யாழ்.ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பாவனைக்காகவும் , தேசிய பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கும் வகையிலும் பயன்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற அமர்வின்போது  விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றியதாவது,

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அமைச்சுக்களின் பிரதான அமைச்சாக  நிதி மற்றும் பொருளாதார திட்டமிடல் அமைச்சு காணப்படுகிறது. பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் நிதி வளம் மற்றும் திட்டமிடல் மிகவும் முக்கியமானது. பொருளாதார மேம்பாட்டுக்காக கொண்டு வரும் சகல திட்டங்களுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

இருப்பினும் இந்த சபையில் பேசும் ஓரிரு விடயங்கள் வெட்கத்துக்குரியன. யுத்த முடிவடைந்ததன் பின்னர்  மரண அச்சத்தில் தான் வாழந்தோம். கடந்த ஆட்சியாளர்கள் மற்றும் அரசாங்கங்கள் நிதி முகாமைத்துவத்தில் விட்ட பிழைகளினால் தான் இந்த நாடு இன்று கையேந்துகிறது.

யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்திகள் தொடர்பில் கடந்த அரசாங்கங்கள் அவதானம் செலுத்தவில்லை. பயனற்ற வகையிலான திட்டங்களுக்கு அதிக முதலீடுகள் செய்யப்பட்டன.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பாரிய  போராட்டத்துக்கு மத்தியில் தான் குடியமர்த்தப்பட்டார்கள்.  இரண்டு தகரங்களுக்கு கீழ், மரத்துக்கடியில்  தான் வாழ்ந்தார்கள்.இவ்வாறான பின்னணியில் யாழ்ப்பாணத்தில் பல கோடி ரூபா செலவில் ஜனாதிபதி மாளிகை நிர்மாணிக்கப்பட்டது. இதனால் எவ்வித பயனும் மக்களுக்கு கிடைக்கவில்லை.

பல கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட  யாழ்.ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பாவனைக்காகவும் , தேசிய பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கும் வகையிலும் பயன்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றார்.