சுகாதார சேவையாளர்களின் முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து எதிர்க்கட்சிகள் விசேட கவனம் செலுத்த வேண்டும்

72 0

அரசியல் நோக்கத்துடன் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு நோயாளிகளின் உயிரை  பணயமாக வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது முறையற்றது. அவுஸ்ரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளை போல் சம்பளம் வழங்க முடியாது.

அவ்வாறான பொருளாதார நிலைமை இங்கு இல்லை.  சுகாதார சேவையாளர்களின்  முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து எதிர்க்கட்சிகள் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற அமர்வின் போது சுகாதார  சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் விசேட  கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

சுகாதார சேவையில் ஒரு தரப்பு வைத்தியர்கள்  மற்றும் இணை சேவையாளர்கள்  இன்று  (நேற்று)  24  மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் .

வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார சேவையாளர்களுக்கு வழங்கப்பட்ட மேலதிக கொடுப்பனவு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

கடந்த 6 ஆம் திகதி பணிபுறக்கணிப்பில் ஈடுவதாக குறிப்பிட்டிருந்தார்கள். சுகாதார அமைச்சின் மீதான விவாதம் நடைபெறும் போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது முறையற்றது.

ஆகவே பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என்று அறிவுறுத்தியிருந்தேன். அதற்கமைய அன்றைய தினம்  அவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவில்லை.

சுகாதார  சேவையாளர்கள் நிதியமைச்சுடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று  வலியுறுத்தியிருந்தார்கள்.அதற்கமைய சுகாதார அமைச்சின் தலையீட்டுடன் சுகாதார சேவையாளர்கள் நிதியமைச்சுடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு  அனுமதி பெற்றுக்கொடுத்தோம்.இதற்கமைய சுகாதார சேவையாளர்கள் அண்மையில் நிதியமைச்சுடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.

பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு முன்னரே  சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதில் உறுதியாக இருந்துள்ளார்கள். பேச்சுவார்த்தை நிறைவடைந்து  நிதியமைச்சில் இருந்து வெளியில் வந்தவுடன் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக ஊடகங்களுக்கு அறிவித்தனர். சுகாதார சேவையில்  தரப்பினர்களில் ஒரு தரப்பினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் முழு சுகாதார கட்டமைப்பும் நெருக்கடிக்குள்ளாகும்.

முன்னாள் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்க முதல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரையான ஆட்சியில்  சுகாதார சேவையாளர்களின்  அடிப்படை சம்பளம் குறைந்த தொகையில் தான் அதிகரிக்கப்பட்டது.  32080  ஆயிரம் ரூபாவாக காணப்படும் சுகாதார சேவையாளர்களின் அடிப்படை சம்பளத்தை  இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக  22040 ரூபாவால் அதிகரித்துள்ளோம்.

சுகாதார சேவையாளர்களின் அடிப்படை சம்பள அதிகரிப்புடன், மேலதிக கொடுப்பனவு, விடுமுறை கொடுப்பனவு உட்பட  இதர கொடுப்பனவுகள் அனைத்தும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வங்கி கடன் பெறும் போதும் அடிப்படை சம்பள தொகையே கருத்திற்கொள்ளப்படும்.இதனால் தான்  அனைத்து தரங்களில் உள்ள சேவையாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரித்துள்ளோம். இவ்வாறான பின்னணியில் தான் ஒரு தரப்பினர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

இந்த பணிப்புறக்கணிப்பில்  சுகாதார சேவையாளர்களின்  துணை மருந்தாளர்கள்,  இடைநிலை சேவை  வைத்தியர்கள் ஈடுபடவில்லை. பெரும்பாலானவர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளார்கள். அடிப்படை சம்பளம், மேலதிக கொடுப்பனவு மற்றும் விடுமுறை கொடுப்பனவு ஆகியவற்றை உன்னிப்பாக கணக்கிடுபவர்கள்.  அவை மக்களின் வரிப்பணத்தால் கிடைக்கப்பெறுகிறது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில்  தான் சுகாதார சேவையாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில்  வழங்கப்படுவதை போன்று சம்பளம் வழங்க முடியாது. அவ்வாறான பொருளாதாரம் இங்கில்லை.அரசாங்கம் பதவிக்கு வந்து 4 மாதங்களுக்குள் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது சாத்தியமற்றது.

நோயாளிகளின் உயிரை பணயமாக வைத்து ஈடுபடும் இவ்வாறான  பணிப்புறக்கணிப்பு போராட்டத்துக்கு  எவரும்  ஒத்துழைப்பு  வழங்க கூடாது. எதிர்க்கட்சிகள் இவ்விடயத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டு மக்களின் நலன் கருதி செயற்பட வேண்டும். தொழிற்சங்கங்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகவே உள்ளோம் என்றார்.